சென்னை,
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "நம்மை நம்பி நம்முடன் களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து, அதிகார பகிர்வு செய்யப்படும். 2026-ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு" என்று கூறினார்.
இந்த நிலையில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன் என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அண்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
"ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" மற்றும் சாதி, மத, வர்க்க பிரிவினை வாதத்திற்கும், ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.