சென்னை: சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பொதுத்துறைச் செயலர் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட சட்டவிரோதமாக கூடுதலாக மணல் அள்ளப்பட்டு, கோடிக்கணக்கில் விற்பனை செய்ததன் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகக்கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக திருச்சி, கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சியர்களுக்கும், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகா்ரிகளுக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.