கொல்கத்தா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 68 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப்சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் 133 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 79 ரன்கள் அடித்தார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது வருண் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டம் முடிந்த பின் இந்திய அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா கூறியதாவது, தமது ஆட்டம் சிறப்பாக அமைந்ததற்கு அவர்கள் (பயிற்சியாளர் மற்றும் கேப்டன்) இருவரும் தான் காரணம்.
ஆடுகளம் கொஞ்சம் கணிக்க முடியாத படி இரட்டை தன்மையுடன் இருந்தது. ஆனால் எங்களுடைய பவுலர்கள் அபாரமாக செயல்பட்டார்கள். நான் பீல்டிங் செய்யும் போது 160 முதல் 170 ரன்கள் துரத்த வேண்டி இருக்கும் என நினைத்தோம். ஆனால் எங்கள் வீரர்கள் அபாரமாக செயல்பட்டார்கள். நானும் சஞ்சு சாம்சனும் நல்ல பார்ட்னராக இருக்கிறோம். ஒருவருக்கொருவர் பேட்டிங் செய்யும்போது மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்கிறோம். சஞ்சு பேட்டிங் செய்யும்போது மறுமுனையில் இருந்து நான் ரசிக்கிறேன்.
நான் முதன்முதலாக இந்திய அணிக்கு பேட்டிங் செய்ய வந்தபோது என்னுடைய திட்டம் எல்லாம் சிம்பிளாக தான் இருந்தது. ஐ.பி.எல் தொடரில் விளையாடியது போலத்தான் இங்கும் விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால், சர்வதேச கிரிக்கெட் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இங்கு நமது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நமக்கு வரும் ஷாட் பாலை சிறப்பாக ஆட வேண்டும்.
ஒரு ஷாட்டை எப்படி ஆட வேண்டும் என்பதற்கான ஆரம்ப புள்ளி குறித்து நான் பயிற்சியில் ஈடுபட்டேன். எனக்கு ஷார்ட் பால் அதிகம் வீசப்படும். என்னுடைய பொறுமையை இங்கிலாந்து பவுலர்கள் சோதிப்பார்கள் என நான் நினைத்தேன். அதற்கு தகுந்தார் போல் என்னுடைய பயிற்சியை நான் மேற்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.