ஆசிரியர்களின் மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாமல் வழங்குக: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

2 months ago 20

சென்னை: ஆசிரியர்களின் மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாமல் வழங்குக வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிதி பள்ளிக் கல்வித்துறைக்கு வரவில்லை என்ற காரணம் கூறி நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் என்று சுமார் 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கக்கூடிய செம்மையான பணியினை மேற்கொள்பவர்கள் ஆசிரியர் சமுதாயத்தினர்.

அப்படிப்பட்ட மேன்மையான பணியினை மாதம் முழுவதும் செய்துவிட்டு, மாதக் கடைசியில் அதற்கு உண்டான ஊதியத்தை வாங்காமல் வெறுங்கையுடன் வீடு திரும்பும்பொழுது வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள், வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்துதல் என்று பணத்தை கட்டமுடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் ஆசிரியர் பெருமக்கள். எனவே, மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், இனி மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாது வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஆசிரியர்களின் மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாமல் வழங்குக: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article