
கொல்கத்தா,
மேற்கு வங்காளாத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரான சாந்து கங்குலியை சிபிஐ நேற்று மாலை கைது செய்துள்ளது.
பெஹாலாவை சேர்ந்த டிஎம்சி நிர்வாகியான கங்குலியை நேற்று சிபிஐ விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊழலில் அவர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. பண பரிவர்த்தனைகளில் அவர் ஈடுபட்டத்தற்கான ஆதாரமும் உள்ளன. கங்குலியின் பெஹாலா இல்லத்தில் சிபிஐ முந்தைய சோதனையின் போது,வழக்கு தொடர்பான பல வங்கி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் நேற்று நடத்த விசாரணையில் அவர் முழுவதுமாக ஒத்துழைக்கவில்லை. இதனால் விசாரணையின் ஒரு பகுதியாக நாங்கள் அவரை காவலில் எடுக்க வேண்டியிருந்தது என்றார்.
இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினரும் முன்னதாக கங்குலியிடம் விசாரணை நடத்தி அவரது வீட்டில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.