ஆசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு... இந்தியாவின் நிலை என்ன?

7 hours ago 2

ஹாங்காங்,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவியது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுகள் பல ஊரடங்கை அமல்படுத்தின. விமானம், ரெயில், பஸ், கார் உள்ளிட்ட பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்தியாவிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. முதல் அலை, இரண்டாம் அலை என அடுத்தடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு பரவியது. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, 2 டோஸ்களாக செலுத்தப்பட்டன. தவிர பூஸ்டர் டோசும் கொடுக்கப்பட்டது. சில ஆண்டுகளாக தொற்று விகிதம் சரிந்து இருந்தது. இந்நிலையில், ஆசியாவில் புதிதாக கொரோனா அலை பரவல் காணப்படுகிறது. ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தொற்று விகிதமும் உயர்ந்துள்ளது.

இதில், ஒரே வாரத்தில் ஹாங்காங்கில் 31 பேருக்கு கடுமையான பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. ஹாங்காங்கின் பிரபல பாடகர் இயாசன் சான் என்பவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தைவானில் நடத்த இருந்த இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு ஏற்பட்ட தொற்று, பொதுமக்களின் கவனம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, தனி நபர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய தேவை மற்றும் நெருக்கடி ஆகியவை பரவலாக உணரப்பட்டு உள்ளது.

சிங்கப்பூரில் ஏறக்குறைய ஓராண்டுக்கு பின்னர் அதிக அளவிலான தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், மே 3-ந்தேதியுடன் முடிந்த வார இறுதியில், கொரோனா பாதிப்பு 28 சதவீதம் அதிகரித்து உள்ளது. 14,200 பேருக்கு புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதே காலகட்டத்தில், கொரோனா தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 30 சதவீதம் அதிகரித்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

எனினும், ஆபத்து நிறைந்த, புதிய உருமாறிய கொரோனா பாதிப்புகளுக்கான சாத்தியம் இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். முதியவர்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கொரோனாவுக்கான பூஸ்டர் டோஸ்களை எடுத்து கொள்ளும்படி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சீனாவில் மே 4-ந்தேதி வரையிலான 5 வார முடிவில் தொற்று விகிதம் இரட்டிப்படைந்து உள்ளது என சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் கடந்த கோடை காலத்தில் ஏற்பட்டது போன்று சீனாவில் இந்த முறையும் தொற்று அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. தாய்லாந்து நாட்டில் நடப்பு ஆண்டில் 2 முறை பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சமீபத்தில் ஏப்ரலில் நடந்த புது வருட திருவிழாவில் நிறைய பேர் கூடினர். இதனால் தொற்று பரவியிருக்க கூடும் என கூறப்படுகிறது.

இதனால், அதிக ஆபத்து பிரிவில் உள்ள நபர்கள் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்களை எடுத்து கொள்ளும்படி இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவை எடுத்து கொண்டால் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை நாட்டில் புதிய அலைக்கான அடையாளம் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

எனினும், ஆசியாவில் உள்ள அண்டை நாடுகளில் தொற்று விகிதம் அதிகரித்து காணப்படும் சூழலில், நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலைமை விரைவாக மாறலாம். பொதுமக்களை ஆபத்தில் தள்ளலாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கோடை காலத்தில் கொரோனா பரவல் இருக்காது என்ற நம்பிக்கை பொதுவாக காணப்பட்டது. ஆனால், ஆசியாவில் நிலைமை அதற்கு எதிராக உள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த அலை காணப்படுகிறது.

எதிர்ப்பு சக்தி குறைவு, பயணங்கள் அதிகரிப்பு மற்றும் கூட்டம் கூடுதல் ஆகியவற்றால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது என கூறப்படுகிறது.

Read Entire Article