சென்னை,
ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் சவுதி அரேபியா தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக ஆசிய போட்டிக்கு தகுதி பெறும். 3-வது இடம் பிடிக்கும் 6 அணிகள் தங்களுக்குள் மோதி அதில் இருந்து 4 அணிகள் பிரதான சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.
தகுதி சுற்றில் 'இ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டு புள்ளி கணக்கை தொடங்காமல் உள்ளது. இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறும் தனது 3-வது லீக் ஆட்டத்தில் முய்ன் பெக் ஹபீஸ் தலைமையிலான இந்திய அணி, கத்தாரை எதிர்கொள்கிறது.