ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு: டேங்க், 140 அடி உயர விளம்பர பலகை மீது ஏறி வாலிபர்கள் தற்கொலை மிரட்டல்; திருப்போரூர் அருகே பரபரப்பு

4 months ago 10

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காலவாக்கம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோரத்தில் பல ஆண்டுகளாக ராஜலிங்கம், சுந்தரலிங்கம், அரசலிங்கம் ஆகிய 3 சகோதரர்கள் ஆக்கிரமிப்பு செய்து, வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர், ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்படும்போது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகக்கூறி வந்தனர். இந்த, ஆக்கிரமிப்புகளை கடந்த ஆண்டு அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி போலீசாரும், நெடுஞ்சாலை துறையினரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டபோது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்வதாக மிரட்டியதால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. தற்போது, மீண்டும் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றியே ஆக வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை 7 மணி முதல் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும், ஆம்புலன்சும் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.

அப்போது, வீட்டின் உரிமையாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜலிங்கத்தின் மகன்கள் தினேஷ் மற்றும் லோகேஷ் ஆகியோர் அருகே இருந்த உயரமான பேனர் கம்பத்தின் மீதும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீதும் ஏறிக்கொண்டு வீட்டை இடித்தால் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டினர். இதனால் போலீசார், அவர்களிடம் கீழே இறங்கி வருமாறு கூறினர். இதைத்தொடர்ந்து, திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன், நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் லெனின், உதவி பொறியாளர்கள் அரவிந்த் ராஜ், சுபிதா, சாலை ஆய்வாளர்கள் அப்துல் காதர், பிந்து, ஸ்ரீதர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த, பேச்சுவார்த்தையில் ஆக்கிரமிப்பு செய்த நபர்களுக்கு தலா 2 சென்ட் காலி மனை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும், 10 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை ஒத்தி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பிரச்னை காரணமாக திருப்போரூர் ஓ.எம்.ஆர். சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு: டேங்க், 140 அடி உயர விளம்பர பலகை மீது ஏறி வாலிபர்கள் தற்கொலை மிரட்டல்; திருப்போரூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article