தாம்பரம் அருகே முடிச்சூர் ஊராட்சியில் உள்ள ரங்க நகர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், குளத்தின் அளவை குறைத்து சீரமைக்கப்படுவதால், அரசு பணம் ரூ.4 கோடி வீணாவதாக பொதுமக்கள், விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே முடிச்சூர் ஊராட்சி ரங்க நகரில் சுமார் 4.22 ஏக்கர் பரப்பளவில்,குளம் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துவந்தது. அதேபோல் அந்த பகுதி விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்த குளம் தற்போது கழிவுநீர் தேங்கும் குளமாக மாறியது. பராமரிப்பில்லாமல் குப்பை, பிளாஸ்டிக் தேங்கி, சீர்கெட்டுப்போயுள்ள இந்த குளத்தை சீரமைத்து, சுற்றுச்சுவர், நடைபாதை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.4 கோடி செலவில், குளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தூர்வாரி ஆழப்படுத்துதல், நடைபாதை, சிறுவர் விளையாட்டு பூங்கா, முதியோருக்கான உடற்பயிற்சி கருவிகள், வாகன நிறுத்தம், இருக்கை, பயோ டாய்லெட், நடைபாதை, மிதக்கும் நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் அமையவுள்ளன.