ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறையினர் நடவடிக்கை

2 days ago 2

சென்னை: மாமல்லபுரம் அருகே, தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர். மாமல்லபுரம் அடுத்த, குழிப்பாந்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட குச்சிக்காடு கிராமத்தில் அரசு கிராம புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலத்தை, சென்னையைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, அந்நிலத்தில் மதில் சுவர் அமைத்து வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றது.

இதுகுறித்து, தனியாரிடம் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு குச்சிக்காடு கிராமத்திற்கு வழங்க வேண்டும் என குழிப்பாந்தண்டலம் ஊராட்சி துணை தலைவர் வேணுகோபால் தலைமையில், கிராம மக்கள் 2 ஆண்டுகளாக வருவாய்த்துறையினருக்கு நேரில் சென்று மனு கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி, மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் நேரில் வந்து அளவீடு செய்தனர். அப்போது, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது உறுதியானது.

இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள மதில் சுவரை இடித்து அகற்றி சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறையினர் அதிரடியாக மீட்டனர். இதனால், மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் துணை தலைவர் வேணுகோபால், தாசில்தார் ராதா உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவித்தனர்.

The post ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article