ஆகாஷ் தீப் திறமையான வேகப்பந்து வீச்சாளர்தான்.. ஆனால்.. - இந்திய முன்னாள் வீரர்

3 months ago 20

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் தேர்வாகியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த அறிமுக போட்டியிலேயே நன்றாக பந்து வீசிய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அதைத் தொடர்ந்து 2024 துலீப் கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அவர் பி அணிக்கு எதிரான முதல் ரவுண்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் அடுத்ததாக வங்காளதேச தொடரில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வாய்ப்பில் வங்காளதேசத்திற்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அதனால் ஆஸ்திரேலிய தொடரில் அவருக்கு இடம் கிடைக்கும் என்றும் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் அவர்தான் என்றும் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில், "ஆகாஷ் தீப் ஒரு திறமையான பந்துவீச்சாளர் தான். ஆனாலும் அவர் இன்னும் பழைய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆகாஷ் தீப் புதுப்பந்தில்தான் விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். ஆனால் பழைய பந்தில் அவரால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. இருப்பினும் அவர் உள்ளூர் தொடர்களில் பழைய பந்தில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். எனவே வெகுவிரைவில் அவர் பழைய பந்திலும் விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று நம்புகிறேன்.

தற்போதைக்கு நான் அவரை இந்திய டெஸ்ட் அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனாலும் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக அவர் ஆஸ்திரேலிய தொடருக்கான விமானத்தில் இடம் பிடிப்பார். அதேபோன்று தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் வேளையில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துவதால் இந்திய அணியின் பந்துவீச்சு பலம் அதிகரித்தே காணப்படுகிறது" என்று கூறினார்.

Read Entire Article