ஆகாயத்தாமரைகளால் வறண்ட ராமநாயக்கன் ஏரி

3 hours ago 2

ஓசூர், ஏப்.29: ஓசூரில் வெயிலால் ஆகாயதாமரைகளால் வறண்டு வரும் ராமநாயக்கன் ஏரியால், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். ஓசூர் மாநகராட்சி குடியிருப்புகள் மத்தியில், ராமநாயக்கன் ஏரி சுமார் 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு மேல்பூனப்பள்ளி ஏரி, ஜீகூர் ஏரி, தாசரப்பள்ளி ஏரி, கர்னூல் ஏரி, அந்திவாடி ஆகிய ஏரிகள் நிரம்பும் போது, உபரிநீர் ஒவ்வொரு ஏரிக்கும் சென்று இறுதியாக ராமநாயக்கன் ஏரியை வந்தடையும் வகையில், உபரிநீர்க் கால்வாய்கள் இருந்தன. 1980ம் ஆண்டு வரை, இந்த ஏரியை நம்பி பல ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக இருந்ததால், கோடைக்காலங்களிலும் குடிநீருக்கு பஞ்சமின்றி இருந்தது. நாளடைவில் ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பளவு குறைந்தது.

ஏரியில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால், தண்ணீரின்றி மேய்ச்சல் நிலமாக மாறி உள்ளது. இதனால், வரும் கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக இருந்த ராமநாயக்கன் ஏரி, தற்போது ஆக்கிரமிப்பால் பரப்பளவு குறைந்துள்ளது. ஏரியை சுற்றிலும் உள்ள தனியார் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை குழாய் அமைத்து ஏரியில் திறந்து விடுவதால், ஏரி மாசடைந்துள்ளது. மாநகராட்சி சார்பில், பல கோடி நிதி ஒதுக்கி, ஏரியை அழகுப்படுத்துவதாக ஆங்காங்கே மண்திட்டுகள் ஏற்படுத்தி, ஏரியை மேலும் சுருக்கி விட்டதால் குட்டை போல் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த தண்ணீரிலும் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது.

ராமநாயக்கன் ஏரி தண்ணீர், நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்ததால், நகர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் ஓரளவுக்கு தண்ணீர் இருந்தது. கோடையில் தண்ணீர் பற்றாக்குறையின்றி சமாளித்து வந்தோம். தற்போது, கோடைக்கு முன்னரே ஏரியில் தண்ணீரின்றி வறண்டு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி உள்ளதால், எதிர் வரும் கோடையில், கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, ஏரிக்கு நீர் வரும் கால்வாய்களை தூர்வார, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஆகாயத்தாமரைகளால் வறண்ட ராமநாயக்கன் ஏரி appeared first on Dinakaran.

Read Entire Article