அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன்; மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை உயிரோடு இருப்பேன்: மேடையில் மயங்கிய பின் மீண்டும் எழுந்து கார்கே ஆவேசம்

2 months ago 24

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திடீரென மயங்கிய சம்பவத்தை தொடர்ந்து, அவரிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். ஜம்மு – காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டார். மேடையில் பேசிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. லேசாக சரிந்த அவரை மேடையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஓடிவந்து தாங்கிப் பிடித்தனர். பின்னர் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தனர். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பேசிய கார்கே, ‘அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன். மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை நான் உயிரோடு இருப்பேன். எனது கரங்களை சங்கலியால் கட்டிப் போட்டிருக்க மாட்டேன்.

நான் உங்களுக்காக போராடுவேன்’ என்று ஆவேசமாக பேசினார். இதுகுறித்து கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் வெளியிட்ட பதிவில், ‘ஜஸ்ரோட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்துள்ளனர். குறைந்த ரத்த அழுத்தமே தவிர, அவர் நலமாக உள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே கார்கே மேடையில் மயங்கிச் சரிந்த செய்தியை அறிந்த பிரதமர் மோடி, தொலைபேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

The post அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன்; மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை உயிரோடு இருப்பேன்: மேடையில் மயங்கிய பின் மீண்டும் எழுந்து கார்கே ஆவேசம் appeared first on Dinakaran.

Read Entire Article