
ஜெய்ப்பூர்,
ஐ..பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 66 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 178 ரன் மட்டுமே எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 74 ரன் எடுத்தார். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக ஆடவில்லை அவருக்கு பதிலாக ரியான் பராக் அணியை வழிநடத்தினார்.
மேலும், இந்த போட்டியில் ராஜஸ்தான் தரப்பில் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி களம் இறங்கினார். அவர் 20 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 2 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் இளம் வயதில் அறிமுகம் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
அறிமுக போட்டியிலேயே அதிரடி காட்டிய சூர்யவன்ஷிக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், இளம் வயதில் அறிமுகம் ஆன சூர்யவன்ஷி 20 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது கண் கலங்கியபடி சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.