
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள புகழ்பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
கடந்த 5-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து பெரிய தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இன்று (வியாழக்கிழமை) காலை தேரின் மேல் வீற்றிருந்த சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. சிவாச்சாரியார்கள், ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் 'அவிநாசியப்பா', 'அரோகரா', 'நமசிவாயா', சிவ... சிவ... என பக்தி கோஷமிட, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமாஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. நாளை 9-ம் தேதி காலை 9 மணிக்கு மீண்டும் திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது.
10-ந் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 11-ந்தேதி மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும் 12-ந்தேதி தெப்ப தேர் உற்சவமும் நடக்கிறது. 13-ந்தேதி மகா தரிசன விழாவும், 14-ந்தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.