அரசுக்கு எதிராக போர் தொடுக்க முயன்றதாக வழக்கு - கேரள இளைஞர் கைது

3 hours ago 1

மும்பை,

கேரள மாநிலம் எடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரெஜாஸ் ஷீபா சைதீக்(வயது 26). 'ஜனநாயக மாணவர் சங்கம்' என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வரும் சைதீக், சுயாதீன பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் சாதி பிரிவினை, வகுப்புவாத வன்முறை, அரசு அடக்குமுறை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களை விடுவிக்கக் வலியுறுத்தி டெல்லியில் பத்திரிகையாளர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சைதீக் சென்றிருந்தார். அதில் கலந்து கொண்டுவிட்டு கேரளாவிற்கு திரும்பியபோது, மராட்டிய மாநிலம் நாக்பூரில் வைத்து சைதீக்கை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது புதிய குற்றவியல் சட்டம் பிரிவு 149(இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க தயாராகுதல்), பிரிவு 192(கலவரத்தை தூண்டுதல்), பிரிவு 351(மிரட்டுதல்), மற்றும் பிரிவு 353(பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளை வெளியிடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நாக்பூரில் வசித்து வரும் சைதீக்கின் தோழி இஷா குமாரி என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article