அவிநாசியில் புதிதாக கட்டப்பட்ட தாய் சேய் நலப்பிரிவு பயன்பாட்டிற்கு வருமா?

1 week ago 6

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அவிநாசி : அவிநாசியில் புதிதாக கட்டப்பட்ட தாய் சேய் நலப்பிரிவு மருத்துவமனை பயன்பாட்டிற்கு எப்போது வரும்? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அவிநாசி தாலூகாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்புகளை தீவிரமாக மேம்படுத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், அவிநாசி அரசு மருத்துவமனையில் ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் 15328 சதுர அடியில் தாய் சேய் நலப்பிரிவு, மகப்பேறு மருத்துவப்பிரிவு தரைத்தளம் மற்றும் முதல் தளம் அமைக்கப்பட்டு இதன் கட்டிடப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

அவிநாசி வட்டாரத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்தும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகப்பேறு மருத்துவமனையில் தரைத்தளத்தில் வரவேற்பு அறை, பிரசவ அறை, ஸ்கேன் அறை, வெளிப்புற நோயாளிகள் பிரிவு, பிரசவ முன் சிகிச்சை பிரிவு, பிரசவ பின் சிகிச்சை பிரிவு, மருத்துவர் அறை, செவிலியர் அறை, மருந்தகம், சாய்தளம், கழிவறை வசதிகள் என 21 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், முதல் தளத்தில் தனித்தனியாக இரண்டு அறுவை அறைகள், பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, டிரெஸ்ஸிங் அறை, அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளிகளை தயார்படுத்தும் அறை, பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் அறை, சாய்தளம், கழிவறை வசதிகள் ஆகியன 2 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய மருத்துவமனை கட்டிட வளாகத்தில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகளும் அமைத்துள்ளனர். இங்கு எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் வசதிகளும் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு மருத்துவமனை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் அனைத்து சிகிச்சையும் விரைவில் பெறமுடியும். மேலும், அரசு மருத்துவமனையில் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும்’’ என்றனர்.

The post அவிநாசியில் புதிதாக கட்டப்பட்ட தாய் சேய் நலப்பிரிவு பயன்பாட்டிற்கு வருமா? appeared first on Dinakaran.

Read Entire Article