புது டெல்லி: நடப்பு ஐபிஎல் தொடரில் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட பன்ட் நடப்பு சீசனில் 12 போட்டிகளில் ஆடி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் அவரது பேட்டிங் ஆர்டரிலும் மாற்றம் காணப்பட்டன. இந்நிலையில் ரிஷப் பன்ட் குறித்து ரவீந்திர ஜடேஜா கூறியதாவது: கிரிக்கெட்டில் நான் ரசித்த மிக சிறந்த பேட்ஸ்மேன்களில் ரிஷப் பன்ட்டும் ஒருவர். அவரின் பேட்டிங் ஸ்டைலை வேறு எந்த பேட்ஸ்மேனாலும் அவ்வளவு எளிதாக ஆட முடியாது. மிகவும் துணிச்சல்மிக்க வீரரான அவருக்கு நடப்பு சீசன் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. நான் அவருக்கு ரசிகரானதே அவரின் தனித்துவமான பேட்டிங் ஸ்டைலுக்காக தான். ஆனால் நடப்பு சீசனில் அவரது பேட்டிங் ஸ்டைலில் பெரும் மாற்றம் இருந்தது.
நான் கண்டு ரசித்த பன்ட்டின் துணிச்சல் மிக்க பேட்டிங்கை இந்த தொடர் முழுவதிலும் என்னால் காண முடியாதது வியப்பாக இருக்கிறது. பன்ட் தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றக் கூடாது. அப்படி மாற்ற நேர்ந்தால், சாதாரணமாக பேட்டிங் ஆடும் 1,500 வீரர்களில் ஒருவராக தான் அவர் இருப்பார். நடப்பு தொடரில் பன்ட் சிறப்பாக ஆடாததற்கு அழுத்தம் தான் காரணம் என்று கூறினால், அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு புது முக வீரருக்கு அழுத்தம் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். பன்ட் ஏற்கனவே பல சீசன்களில் விளையாடி இருக்கிறார். கேப்டனாகவும் முத்திரை பதித்திருக்கிறார். அப்படி இருக்கையில் நடப்பு தொடரில் அவரின் பார்ம் எனக்கு வியப்பாகவும், விநோதமாகவும் இருக்கிறது. ஒரு சீசனை மட்டும் வைத்து ஒரு வீரரை எடை போட்டுவிடக்கூடாது. அடுத்த சீசனில் நிச்சயம் பன்ட் புத்துணர்ச்சியுடன் களம் இறங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post அவர் ஒரு தனித்துவமான வீரர்; பேட்டிங் ஸ்டைலை பன்ட் மாற்றக் கூடாது: ரவீந்திர ஜடேஜா பேட்டி appeared first on Dinakaran.