மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

1 day ago 1

பெங்களூரு,

5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 14வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வயட்-ஹாட்ஜ் களம் இறங்கினர். இதில் மந்தனா 8 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் புகுந்த எல்லிஸ் பெர்ரி ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இதில் டேனியல் வயட்-ஹாட்ஜ் 21 ரன், ராக்வி பிஸ்ட் 33 ரன், ரிச்சா கோஷ் 5 ரன், கனிகா அகுஜா 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பெர்ரி அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் பெங்களூரு 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 60 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் ஷிகா பாண்டே, நல்லபுரெட்டி ஷாரனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது.

தொடக்கத்தில் மெக் லேனிங் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷபாலி வர்மா, ஜெஸ் ஜான்சென் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் . அதிரடி காட்டிய இருவரும் அரைசதம் அடித்தனர் . இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ்  15.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது . இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. ஷபாலி வர்மா 80 ரன்களும், ஜெஸ் ஜான்சென் 61 ரன்களும் எடுத்தனர். 

Read Entire Article