அவரை சேர்த்ததால் அணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது - மனோஜ் திவாரி பரபரப்பு கருத்து

2 months ago 12

மும்பை,

இந்தியா - நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் புனேயில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி, 2-வது போட்டியிலும் தோல்வியடைந்ததால் 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் வரும் நவம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

முன்னதாக இந்த தொடரின் 2-வது போட்டியில் குல்தீப் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். அவர் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு போராடினார்.

இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்க தற்போது வாஷிங்டன் சுந்தரை அணிக்குள் கொண்டு வந்தது பெரிய பிளவை இந்திய அணிக்குள் ஏற்படுத்தும் என முன்னாள் வீரரான மனோஜ் திவாரி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பெங்களூரு நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க வானிலைதான் காரணம். பந்துவீச்சுக்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் டாஸ் வென்றதும் பந்துவீச்சை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் பேட்டிங்கை தேர்வு செய்து தவறு செய்து விட்டார்கள். அதே போன்று அந்த முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது போட்டியில் மாற்றத்தை செய்திருக்கக் கூடாது. ஆனால் குல்தீப் யாதவை நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தரை சேர்த்தது சிறப்பான முடிவு என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் என்னதான் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டாலும் அது இந்திய அணிக்குள் நாளடைவில் குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் அணிக்குள் விரிசல் ஏற்பட கூட வாய்ப்புள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் ஆல்ரவுண்டராக அக்சர் படேல் இருந்தும் அவருக்கு பதிலாக சுந்தரை விளையாட வைத்தது தவறு. அதே போன்று குல்தீப் யாதவ் போன்ற திறமையான வீரருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இப்படி பல விஷயங்கள் இதில் குழப்பத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார்.

Read Entire Article