அவரை இந்திய அணி தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும் - அனில் கும்ப்ளே

3 hours ago 2

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 387 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டை இந்திய ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி கைப்பற்றினார். இந்த இன்னிங்சில் 17 ஓவர்கள் வீசிய அவர் 62 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவரது இந்த செயல்பாடுகளை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நிதிஷ் ரெட்டி தொடர்ச்சியாக நிறைய ஓவர்கள் வீசுவது ஆச்சரியமளிப்பதாக இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். எனவே நல்ல பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்யும் திறன் கொண்டுள்ள அவருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நிதிஷ் குமார் ரெட்டி எவ்வளவு சிறப்பாக பந்து வீசியதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவர் தொடர்ச்சியாக சரியான இடங்களில் பந்தை வீசுகிறார். ஜாக் கிராலியை அவர் அவுட்டாக்கிய பந்து அழகானது. ஆஸ்திரேலியாவில் அவர் நன்றாகச் செயல்பட்டார் என்று நான் நினைக்கிறேன். பேட்டிங்கில் சதம் அடித்தார். அதிக விக்கெட்டுகள் எடுக்காவிட்டாலும் கண்ணியமாக பந்து வீசினார்.

அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து உங்களுக்குத் தேவையானது எதிரணியின் பார்ட்னர்ஷிப்களை உடைத்து மற்ற பந்து வீச்சாளர்களுக்கு நிம்மதியைக் கொடுப்பதுதான். கிட்டத்தட்ட 14 ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை வீசியது அவரது உடற்தகுதி மற்றும் கட்டுப்பாட்டைக் காட்டுகிறது.. மிகவும் இளம் பையனான அவர் ஏற்கனவே சதத்தை அடித்தவர், கூர்மையாக பீல்டிங் செய்யக் கூடியவர். எனவே மாற்றங்களைத் தவிர்த்து அவரை இந்தியா தொடர்ச்சியாகப் பயன்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

Read Entire Article