அவருடைய பணி நெறிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் - பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் கருத்து

6 months ago 21

பெங்களூரு,

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி, ரஜத் படிதாரை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தொடரில் மும்பை அணியின் தொடக்க வீரராக பிரித்வி ஷா விளையாடினார். ஐ.பில்.எல் ஏலத்தில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை.

அதற்கு பதிலடியாக இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கபட்ட வேளையில் அவர் 9 போட்டிகளில் விளையாடி 197 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் மீண்டும் பிரித்வி ஷா மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மும்பை அணியை வழிநடத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது, பிரித்வி ஷா கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மற்ற யாரிடமும் இல்லாத அளவிற்கு பிரித்வி ஷாவிடம் திறமைகள் உள்ளது.

ஆனால் பிரித்வி ஷா சில விஷயங்களில் முன்னேற வேண்டிய தேவை உள்ளது. கிரிக்கெட் விளையாடினால், அதற்கு தயாராகுவதற்கு என்று சில நெறிமுறைகள் உள்ளன. அதனை இன்னும் கட்டுக்கோப்புடன் பின்பற்ற வேண்டும். அதனை சரியாக செய்தால், பிரித்வி ஷாவிற்கு அந்த வானம் மட்டுமே எல்லையாக இருக்கும். அவ்வளவு சாதனைகளை பிரித்வி ஷா படைப்பார். யாருக்கும் குழந்தையை போல் அருகில் அமர்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது.

பிரித்வி ஷா ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவிட்டார். அவருக்கு அனைவரும் தங்களின் ஆலோசனைகளை கூறியுள்ளனர். யார் என்ன சொன்னாலும், அவர் தனது பணியை எவ்வாறு செய்யலாம் என்று கண்டறிய வேண்டும். ஏற்கனவே கடந்த காலங்களில் பார்மின்றி தவித்த போது, பிரித்வி ஷா எப்படி கம்பேக் கொடுக்க வேண்டும் என்று கண்டறிந்திருக்கிறார். அதனால் அவருக்கு தெரியாதது ஒன்றுமில்லை.

ஆனால் கவனம் கிரிக்கெட்டில் மட்டுமே இருக்க வேண்டும். தனியாக அமர்ந்து, எங்கே தவறு நடக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். அப்படி செய்தாலே, தவறு எங்கு நடக்கிறது என்பதற்கான பதில் கிடைத்துவிடும். அவர் இதனை மட்டுமே செய்ய வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article