அவரவர் வினைக்கேற்ப வாழ்வு அமையும்.. திருதிராஷ்டிரருக்கு உணர்த்திய பகவான் கிருஷ்ணர்

4 weeks ago 9

குருஷேத்திர போரில் கவுரவர்கள் 100 பேரும் மரணமடைந்தனர். இதனால் அவர்களின் தந்தை திருதிராஷ்டிரர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தார். போருக்குப் பின் ஒருநாள் பகவான் கிருஷ்ணரை சந்தித்த திருதிராஷ்டிரர், "கிருஷ்ணா.. நான் குருடனாக இருந்தாலும், நீதிமானான விதுரரின் சொல்லைக் கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படி இருந்தும் இப்போது என் பிள்ளைகள் 100 பேரை இழந்து தவிப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணர், "திருதிராஷ்டிரரே.. உங்களுக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதன் முடிவில் ஒரு கேள்வியும் கேட்பேன். அதற்கு நீங்கள் சரியான பதிலை சொல்லும் பட்சத்தில், உங்களின் கேள்விக்கும் பதில் கிடைக்கும்" என்று சொல்லி விட்டு, அந்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.

முற்பிறவியில் செய்த தவறு

ஒரு ராஜ்ஜியத்தை நீதி தவறாமல் ஆட்சி செய்தான் ஒரு மன்னன். அவனிடம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவன், சமையல்காரனாக பணிக்கு சேர்ந்தான். மிகவும் சுவையாக சமைப்பது, மன்னரை சிறப்பான முறையில் கவனிப்பது என்று அவன் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக அவன் வெகு விரைவிலேயே தலைமை சமையல் கலைஞனாக தரம் உயர்த்தப்பட்டான்.

அதன்பின்னர் மன்னனுக்கு வித்தியாசமான சுவையில் உணவு செய்து கொடுத்து பரிசு பெறுவது ஒன்றே அந்த சமையல் கலைஞனின் நோக்கமாக இருந்தது.

அதன்படி அரண்மனை குளத்தில் நீந்திக் கொண்டிருந்த அன்னப் பறவையின் குஞ்சு ஒன்றை பிடித்து ரகசியமாய் சமைத்து மன்னனுக்கு பரிமாறினான். தான் சாப்பிடுவது எந்த வகையான உணவு என்று தெரியாமல் அந்த சுவையில் மன்னன் மயங்கினான். அதை மிகவும் விரும்பிய மன்னன், அடிக்கடி அந்த உணவை சமைக்குமாறும், தலைமை சமையல் கலைஞனுக்கு உத்தரவிட்டான். அந்த சுவையின் காரணமாக சமையல் கலைஞனும் பெரும் பரிசுகளைப் பெற்றான்.

கதையை இத்துடன் முடித்துக் கொண்ட கிருஷ்ணர், "இப்போது சொல்லுங்கள் திருதிராஷ்டிரரே.. மன்னன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்?" என்று கேட்டார்.

மன்னனே தவறிழைத்தவன்

"ஒரு முறை வசிஷ்ட மகரிஷியின் சமையல்காரனும், புலால் கலந்த உணவை வசிஷ்டருக்கு வைத்து விட்டான். ஆனால் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து அவனுக்கு சாபமிட்டார். அந்த விவேகமும், எச்சரிக்கை உணர்வும் இந்த மன்னனிடம் இல்லையே. சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் புலால் உண்டும், அதை கண்டுபிடிக்காத மன்னன்தான் அதிகம் தவறிழைத்தவன் ஆகிறான்" என்று பதிலளித்தார், திருதிராஷ்டிரர்.

தெய்வத்தின் முன் நீதி தவறாது

இந்த பதிலைக் கேட்டு புன்னகைத்த கிருஷ்ணர், "திருதிராஷ்டிரரே.. ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது 'மன்னன் செய்ததே தவறு எனக் கூறினீர்கள். அத்தகைய நீதி தவறாமைதான், பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உங்களை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு பிள்ளைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. ஆனால், நான் சொன்ன கதையே தங்களைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீங்கள்தான் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாக சாப்பிட்டிருக்கிறீர்கள். அந்த அன்னக் குஞ்சுகளும், அதன் தாய் பறவையும் எத்தகைய வேதனையை அடைந்திருக்கும் என்பதை தங்களின் நூறு பிள்ளைகளை இழந்து இப்போது அறிந்துகொண்டீர்கள். முற்பிறவியில் தினம் தினம் பார்த்தும், சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. பிறகு எதற்கு கண்? அதனாலேயே குருடனானாய் பிறந்தீர்கள், தெய்வத்தின் முன்பு ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்" என்றார்.

Read Entire Article