அவதூறு வழக்கில் ஓர் ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

2 months ago 12

சென்னை: தனக்கு எதிரான வழக்குகளில் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பாஜ நிர்வாகி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். பாஜவின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று டுவிட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல்நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளிக்கபட்டன.

இப் புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இரு வழக்குகளிலும் ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் (ஓராண்டு) சிறை தண்டனை விதித்து கடந்த வாரம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருந்து 5 மாதங்களுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தாமதத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 3ம் நபர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நேரடி சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லாத நிலையில் விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது சட்ட விரோதமானது. எனவே சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். மேல்முறையீட்டு வழக்கு முடிவு காணும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post அவதூறு வழக்கில் ஓர் ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article