அவதாரப் புருஷர் மத்வர்!

1 month ago 7

ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி

பெருமை வாய்ந்த பாரத புண்ணிய பூமியில், இந்து தர்மத்தை வலுப்படுத்திய எத்தனையோ மகான்கள் இருந்தாலும், ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று ஆச்சாரியர்களுக்கு இருக்கும் பெருமையும், கீர்த்தியும் மகத்தானது. நம் இந்து தர்மத்தை ஆறு வகையாக வகைப்படுத்தி, புறச்சமயங்களின் செல்வாக்கை ஓடஓட விரட்டி, புண்ணிய உயிர் கொடுத்து, உன்னதமான ஸ்தானத்தை அடைந்தவர், ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர். அவர், பரமசிவனின் அவதாரம்! எல்லாத் தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்து, நாராயணனின் அடியவர்களுக்கு அளப்பரிய பெருமைகள் சேர்ந்து, சரணாகதி தத்துவத்துக்குப் புத்துயிர்கொடுத்துக் கோயில்களுக்கெல்லாம் மறுவாழ்வு கொடுத்தவர், ஸ்ரீராமானுஜர். அவர், ஆதிசேஷனின் அவதாரம்!

இந்து தர்மத்தின் இலக்கியங்களுக் கெல்லாம் மனம் போனபடி வியாக்கியானம் செய்து, அதன் காரணமாகத் தெய்வ நம்பிக்கை குறைந்து, இறையம்சம் மறைந்து, வந்த நேரத்தில், ‘ஹரியே சர்வோத்தமன்’ (ஹரியே அனைத்துமானவன்) என்று நிலைநாட்டி, இந்து தர்மத்தின் விக்கிரக ஆராதனைக்கு மகிமை ஏற்படுத்தியவர், மத்வாச்சாரியார்! மகாவிஷ்ணுவின் அம்சமான வாயுதேவன் ஆன முக்யபிராணனின் (அதாவது மூச்சுக் காற்று) அவதாரம்தான் மத்வாச்சாரியார். அனுமன், பீமன் ஆகியோர் மத்வரின் முப்பிறவிகள் என துவைத சித்தாந்தம் கூறுகிறது.

மத்வரின் காலம் 1238-1317 என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர் இவ்வுலகில் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார். இன்றைய கர்நாடக மாநிலத்தின் தென் கன்னடம் பகுதியில், உடுப்பி அருகே இருக்கும் பாஜகா க்ஷேத்திரத்தில் மத்வர் அவதரித்தார். மத்கேய பட்டர்- வேதவதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு வாசுதேவன் என்று பெற்றோர் பெயர் இட்டனர். பிற்காலத்தில் அவருக்குப் ‘‘பூர்ணப் பிரக்ஞர்’ என்றும், “ஆனந்த தீர்த்தர்’’ என்றும் சிறப்புப் பெயர்கள் வழங்கப்பட்டன.

அனுமன், பீமன் வழி வந்த முக்கிய பிராணரின் அவதாரமான மத்வருக்கு அக்காலத்தில் வழங்கிய சித்தாந்தங்கள் திருப்தி தரவில்லை. அவருடைய தேடல்களுக்குப் பதில் கிடைக்கவில்லை. பதினாறாவது வயதில், சந்நியாசம் மேற் கொண்டுவிட்டார். உடுப்பி அருகில் இருந்த ஒரு ஆசிரமத்தில் அச்சுதபிரேட்சர் எனும் குருவிடம் பயின்றார். ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் ஒன்று என்பதையும், உலகம் மாயை என்பதையும் மத்வரால் ஏற்க முடியவில்லை.

குருவிடம் வாதம் செய்தார். பாகவதம் போன்ற புண்ணிய நூல்களைக் கற்கும் போது, அவற்றின் சரியான பாடல்களை எடுத்துக் காட்டி, எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். பல்வேறு தத்துவ ஞானிகள், சமயச் சான்றோர் மற்றும் புத்த, சமணமத அறிஞர்களுடன் பலமுறை மாதக் கணக்கில் வாதிட்டு மத்வர் வென்றார். மேலும், பகவத் கீதைக்கும், பிரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் இயற்றினார். அவருடைய பாஷ்யங்களுக்கு வேதவியாச பகவானுடைய அனுக்கிரகமே கிடைத்தது.

முதன் முதலாகத் தென் இந்திய யாத்திரையைத் தொடங்கினார். கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, ஸ்ரீரங்கம், கும்பகோணம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி போன்ற பல தலங்களுக்கு யாத்திரை செய்தார். சென்ற இடங்களில் எல்லாம் மத்வரின் கீர்த்தி பரவியது. ஏராளமான மக்கள் அவரைத் தரிசிக்கத் திரண்டார்கள்.

பலருடன் வாதங்களில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடினார்.பின்னர், வடநாட்டு யாத்திரை மேற்கொண்டார். பத்ரிநாத்தில் பல காலம் தங்கி கடுந்தவம்புரிந்தார். அங்கு வேதவியாச பகவானை நேரில் தரிசித்தார். வேதத்தின் உண்மையான அர்த்தங்களை வியாசபகவானிடமிருந்து நேரடியாக மத்வர் அறிந்து கொண்டார். அந்தக் கால கட்டத்தில்தான் ஸ்ரீமந் நாராயணனின் தரிசனமும், ஆசியும் மத்வருக்குக் கிட்டியது.

‘‘வியாசர் தொடங்கிய பணி உன்னால்தான் பூர்த்தியாகும்.’’ என்று ஸ்ரீமந் நாராயணன் ஆசி வழங்கினார். பின்னர் பாரதத்தின் பல பகுதிகளில் தம்முடைய வேதாந்த ஞானத்தைப் பரப்பிய பிறகு, மத்வர் ‘பூர்ணப் பிரக்ஞர் என்ற திருநாமத்துடன் புகழ்க் கொடியுடன் உடுப்பி திரும்பினார்.உடுப்பியில், மகாத்மியம் மேலும் பரிமளிக்க ஓர் அற்புதத்தை நிகழ்த்தினார் மத்வர். பெரும்புயலில் சிக்கிச் சிதறவிருந்த ஒரு கப்பலைத் தமது அற்புதமான ‘‘துவாதஸ ஸ்தோத்திர’’த்தைப் பாடி காப்பாற்றிக் கரை சேர்த்தார்.

நன்றி செலுத்தத் துடித்த கப்பலோட்டியிடமிருந்து, கோபீ சந்தனக் கட்டி ஒன்றைக் கேட்டு வாங்கி, அதனுள் இருந்த ஸ்ரீகிருஷ்ண விக்கிரகத்தை, உடுப்பியில் பிரதிஷ்டை செய்தார். மத்வர் உருவாக்கியதே, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன் கோயில். இங்குதான் மத்வர், ‘‘ஹரியே மூல மூர்த்தி’’ ஸ்ரீமந் நாராயணன் சர்வோத்தமன், அவனுக்கு இணை இல்லை. இந்த உலகம் என்பது மாயை அல்ல. சத்தியமானது. ஜீவர்கள் சரணாகதியடைந்து, ஸ்ரீமந் நாராயணனின் அருளைப் பெறலாம்!’’ என்று பிரச்சாரம் செய்தார்.

700 – ஆண்டுகளுக்கு முன், மத்வரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, முறைப்படி பூஜை ஆராதனைகள் நடத்தப்பட்டு வந்த ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணனை, மத்வர் வழிவந்த சீடர்கள், முறை தவறாமல் இன்றும் வழிபட்டு வருகிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், அத்தனை பேரும் பால சந்நியாசிகள். உடுப்பி கிருஷ்ணன் கோயிலைச் சுற்றி எட்டு மடங்களை ஸ்தாபித்தார் மத்வர். தம்மால் நிறுவப்பட்ட உடுப்பி ஸ்ரீகிருஷ்ண மடத்தை சீராக நிர்வகிக்கவும், அங்கு திருக்கோயில் கொண்டுள்ள பால கிருஷ்ணனை முறைப்படி ஆராதிக்கவும், மத்வர் தமது எட்டுச் சீடர்களை நியமித்தார்.

அந்த பால சந்நியாசிகள், எட்டு மடங்களுக்கு அதிபதி ஆனார்கள். இப்படி 700 – ஆண்டுகளாக அவர்களின் பரம்பரையினர், கிருஷ்ணபக்தியை வளர்ப்பதுடன், துவைத வேதாந்தத்தையும் காத்து, உலகெங்கும் பரப்பிவருகிறார்கள். இந்த எட்டு மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகள், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாறிமாறி ஸ்ரீ கிருஷ்ண மடத்தை நிர்வகித்து, கிருஷ்ண பூஜை செய்கிறார்கள். இதற்கு ‘பர்யாயம்’ என்று பெயர். இரண்டாண்டுகள் பொறுப் பேற்று நிர்வகித்து வரும் மடாதிபதிக்கு, ‘பர்யாய சுவாமிகள்’ என்று பெயர்.

அஷ்டமடங்களை (8 மடங்கள்) சேர்ந்த ஒவ்வொரு சீடருக்கும், ஸ்ரீ மத்வாச்சாரியார் பூஜித்து வந்த ஒவ்வொரு விக்கிரகத்தைத் தந்திருக்கிறார். அவர்கள் அவற்றைச் சொந்த பூஜையில் வைத்துக் கொண்டு, தினமும் ஆராதித்து வருவதோடு, பொதுவான உடுப்பி ஸ்ரீ பால கிருஷ்ணன் பூஜையையும் செய்து வருகிறார்கள்.

எட்டு மடங்களும், ஸ்ரீ கிருஷ்ண மடத்தைச் சுற்றியே இருக்கின்றன. அவை; கணியூர் மடம், புத்திகே மடம், ஸோதே மடம், அதமாரு மடம், பலிமார் மடம், பெஜாவர் மடம், கிருஷ்ணாபுரம் மடம், ஷிரூர் மடம் என்று அழைக்கப்படுகின்றன. உடுப்பி கிருஷ்ணனுக்கு தினமும் செய்யும் மகாபூஜையை, மத்வாச்சாரியாரே நடத்துவதாக நம்புகிறார்கள். எனவேதான், இந்த பூஜையை பர்யாய சுவாமிகளே நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், மகர சங்கராந்தியன்று இரவு நடைபெறும் திருவிழாதான் எல்லாவற்றையும் விடச்சிறப்பானது.

700 – ஆண்டுகளுக்கு முன், அத்திருநாளில்தான் மத்வர், கிருஷ்ண விக்கிரகத்தை அங்கு எழுந்தருளச் செய்தாராம். அன்று இரவு தேரோட்டம் நடைபெறுகிறது. ஆசாரியர்களில் மத்வர் தனித் தன்மை வாய்ந்தவர். ஆஜானு பாகுவான தோற்றமும், அபரிமிதமாக உடல் வலிமையும் பெற்றவர். பீமன் புதைத்து வைத்த கதாயுதத்தை மத்வர் எடுத்துக் காட்டியதாக ஒரு வரலாறு கூறுகிறது. கோமதி நதிக்கரையில் ஆட்சி புரிந்து வந்த மன்னன், வேதமந்திரங்களைப் பற்றி கேலி பேசினான். அவன் முன்பு காய்ந்த வேர்க்கடலைகளைத் தரையில் கொட்டினார் மத்வர்.

வேத மந்திரங்களை உச்சாடனம் செய்தார். கடலைகள் உயிர் பெற்று பசுஞ்செடிகளாக மாறின. இதுதான் வேத மந்திரத்தின் சக்தி என்று மன்னனைப் பணிய வைத்தார். கல்வியிலும், ஞானத்திலும், சேவையிலும், புதிய பாதையைக் காட்டியதிலும் நிகரற்ற பெருமை வாய்ந்த மத்வாச்சாரியார், நம் பாரததேசத்தின் தலை சிறந்த மகான்களில் ஒருவராவார்.ஸ்ரீ மத்வரின் அவதார மகிமைகள் ஏராளம். அவை சொல்லில் அடங்காது. ‘பூவுலகில், தாம் செய்ய வேண்டிய காரியங்கள் முடிவுக்கு வந்துவிட்டது.

‘துவைத சித்தாந்தம்’ பரவிட, பரவித்தழைத்திட அதற்கான எல்லாவித பணிகளையும் செய்தாகிவிட்டது. தமக்குப் பின் தோன்றப் போகும் ஆச்சார்யர்கள் தொடர்ந்து இந்த சித்தாந்தத்தைப் பரப்பி, அதற்கோர் சிரஞ்சீவத்வம் கிடைக்கச் செய்து விடுவார்கள். இனியாதொரு கவலையுமில்லாமல் பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள வேதவியாசரிடமே அடைக்கலம் புக வேண்டியதுதான்’ என்று தீர்மானித்தார்.

தன் பிறவிப்பயனை அடைந்துவிட்டதாகவே நினைத்த மத்வர், ஒரு நாள், தான் பூஜை செய்து வரும் `மூலராமர்’ விக்ரகத்தை அவரின் சீடரான ஸ்ரீ பத்மநாப தீர்த்தரிடம் கொடுத்தார். அவர் அதனை ஆராதித்த பின், அவரின் சீடரான ஸ்ரீ நரஹரி தீர்த்தரிடம் பூஜை செய்து வரும்படி ஒப்படைத்துவிட்டார். இப்படியாக இன்று வரை, மூலராமரின் விக்ரகத்தை மத்வ பரம்பரையில் வந்த சீடர்கள் பூஜைசெய்து வருகின்றார்கள்.

பின்பு, பிங்கள வருடம், மாக சுத்த நவமி அன்று, உடுப்பியிலுள்ள அனந்தேஸ்வரர் கோயிலில் இருக்கும் விசாலமான திண்ணையில் உட்கார்ந்து, ஐதரேய உபநிஷத்தைத் தனது சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென்று எழுந்து, ‘‘நான் இதுவரையில் சொல்லிக் கொடுத்ததைக் கடைப்பிடித்து இனிது வாழுங்கள்’’ என்று சீடர்களிடம் சொல்லிவிட்டு, அனந்தேஸ்வரர் சந்நதியில் நுழைந்து மறைந்தார். தேவர்கள், பூமாரி பொழிய, மத்வாச்சாரியார் சுவாமிகள் ஸ்தூல உடம்புடனேயே மறைந்து, பத்ரிகாஸ்ரமத்திலுள்ள வேதவியாசர் முன்னிலையில் பேரானந்தத்துடன் சிரஞ்சீவியாக வாழ்ந்துவருகிறார். உடுப்பி ஸ்ரீ அனந்தேஸ்வரர் ஆலயத்தில், மகான் மத்வரின் திவ்ய உருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது!

எஸ்.யுவவர்ஷினி

The post அவதாரப் புருஷர் மத்வர்! appeared first on Dinakaran.

Read Entire Article