அவசர சிகிச்சைக்கு பைக் ஆம்புலன்ஸ்!

3 months ago 13

மருத்துவ சேவையில் தமிழக அரசு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களுக்கு, வழிகாட்டும் வகையில் முன்னோடியாக திகழ்கிறது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவ சேவையில் பல புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதில் ஒன்றுதான் 'இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48' திட்டம். சாலை விபத்துகளில் காயம் அடைபவர்களின் எண்ணிக்கையில், நாட்டிலேயே தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது. விபத்து ஏற்பட்டு காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு முதல் ஒரு மணி நேரம் உயிரைக்காப்பாற்ற தங்க நேரமாக கருதப்படுகிறது. அந்த நேரத்துக்குள் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைகளை தொடங்கிவிட்டால், உயிரைக்காப்பாற்ற வாய்ப்பு இருக்கும். ஆனால், பல நேரங்களில் விபத்து நடக்கும் இடங்களின் அருகாமையில் அரசு மருத்துவமனைகள் இல்லாதநிலை இருக்கும். தனியார் மருத்துவமனைகள் அருகில் இருக்கும்.

ஆனால், விபத்தில் சிக்குபவர்கள் ஏழை-எளியவர்களாக இருந்தால், தனியார் மருத்துவமனைகளில் பணம் கட்டி சிகிச்சை பெறமுடியாதநிலை இருந்தது. இதனை கருத்தில்கொண்டுதான், விபத்து நடந்தவுடன் காயம்பட்டவர்கள் அருகில் உள்ள எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக 'இன்னுயிர் காப்போம்-நம்மைக்காக்கும் 48' என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த உயிர்காக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல்மருவத்தூரில் தொடங்கிவைத்தார். இதன்படி, தமிழ்நாட்டில் எந்தவொரு பகுதியில் சாலைவிபத்துகள் நடந்தாலும், காயம்பட்டவர்களுக்கு உடனடியாக அருகிலுள்ள எந்த மருத்துவமனையிலும் முதல் 48 மணி நேரத்துக்குள் சிகிச்சையளிக்க ரூ.1 லட்சத்தை அரசே உதவியாக வழங்கி வந்தது. இதனால், விபத்தில் சிக்கியவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை அளித்துவந்தன. சமீபத்தில் இந்த தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுவிட்டது.

இந்த திட்டத்தின் கீழ், 3 லட்சமாவது பயனாளியாக அரக்கோணம் பகுதியை சேர்ந்த தேன்மொழி என்ற பெண் இருசக்கர வாகனவிபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அரசின் இந்த கருணை திட்டத்துக்கு ஐ.நா.சபையும் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. இந்த திட்டத்துக்கு மேலும் துணையாக இருக்கும் வகையில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லமுடியாத கடினமான, குறுகலான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுடைய அவசரகால மருத்துவ சேவைக்காக பைக் ஆம்புலன்சுகளை பயன்படுத்தும் திட்டத்தையும் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக சென்னை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தேனி, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, திருவண்ணாமலை, ஈரோடு, தர்மபுரி, கோவை ஆகிய மாவட்டங்களில் 66 பைக் ஆம்புலன்சுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் 41 வாகனங்கள் சென்னை உள்பட போக்குவரத்து நெரிசல்மிகுந்த நகர்ப்புறங்களிலும், 25 வாகனங்கள் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இயக்கப்படுகின்றன. இதன்படி, ஒரு மருத்துவ உதவியாளர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று நோயாளிகளுக்கு முதல்உதவி சிகிச்சை அளித்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துசெல்லமுடியும். இந்த ஆம்புலன்ஸ் பைக்கோடு ஒரு கேபினும் இணைக்கப்பட்டுள்ளது.

அதில் உயிர்காக்கும் ஆக்சிஜன் வசதி, மருந்துகள் இருக்கிறது. சமீபத்தில் ஜவ்வாது மலையில் இந்த பைக் ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். தினமும் ஏராளமான உயிர்கள் பைக் ஆம்புலன்சால் காப்பாற்றப்படுகின்றன. இதுவரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 340 பேர் பைக் ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிர்காக்கும் வாகனமாகவே பைக் ஆம்புலன்ஸ் திகழ்கிறது. மருத்துவத்துறையில் புதுமையான திட்டங்களை புகுத்திவரும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பைக் ஆம்புலன்ஸ் திட்டம் பாராட்டுக்குரியது.

Read Entire Article