அள்ளிக் கொடுக்கும் கோவக்காய்!

1 month ago 9

பந்தல் காய்கறிகளைப் பொருத்தவரை சீசன் நேரத்தில் மட்டுமே மகசூல் பார்க்க முடியும். ஆனால், கோவக்காய் அதில் கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது. பந்தலில் கோவையை வளர விட்ட பிறகு நாம் எப்போது பந்தலை பிரிக்கிறோமோ அப்போது வரை மகசூல் கொடுக்கும். வருடம் முழுவதும் பயன் தரக்கூடிய காய்கறிப் பயிர்களில் கோவக்காயும் முக்கியமானது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகாவை சேர்ந்த விவசாயி தனுசு பலவகையான காய்கறிப் பயிர்களோடு சேர்த்து கோவக்காயும் விதைத்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார். கத்தரியை நேரடியாகவும், கோவை மற்றும் புடலையை வியாபாரிகளுக்கு கொடுத்து விற்பனை செய்து வரும் தனுசு அவர்களை கோவக்காய் பந்தலில் அறுவடையில் இருந்தபோது சந்தித்தோம். உங்கள் விவசாய முறையைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றதும் பேசத் தொடங்கினார். எனக்கு பூர்வீகம் திண்டிவனத்தில் இருக்கிற அண்டப்பட்டு கிராமம்தான். டைலரிங் படித்த நான் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் நான்கு வருடங்கள் வேலை செய்து வந்தேன். திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்து விவசாயம் பக்கம் திரும்பினேன். பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க முடிவு செய்து கருப்புகவுனி, குதிரைவால், சீரகசம்பா உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தேன். அதைத்தொடர்ந்து பலவகையான காய்கறிப் பயிர்களை நடவு செய்ய தொடங்கினேன்.

எனக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கிறது. செம்மண்ணும் மணலும் கலந்த அந்த நிலத்தில் பந்தல் அமைத்து கோவை, புடலை சாகுபடி செய்து வருகிறேன். அதேபோல், ஒட்டுகட்டு முறையில் உஜாலா ரக கத்தரியை நடவு செய்துள்ளேன். கோவக்காயை பொருத்தவரையில் ஆயுள் முழுக்க வருமானம் தரும். கோவக்காயை 25 சென்ட்நிலத்தில் தனியாக வளர்த்து வருகிறேன். கல் வைத்து, கம்பியில் பந்தல் கட்டுவதற்கு மட்டும் எனக்கு ரூ.30 ஆயிரம் செலவானது. கோவக்காய் பதியம் போடுவதற்கு கோழிஉரம், எருவுரம் சேர்த்தேன். பதியமிட்டு வளர்த்த கோவக்காய் செடிகளை தனியாக பந்தல் கொடிக்கு மாற்றி நடும்போது 15வது நாளில் இருந்து வளரத் தொடங்கும். இதற்கிடையில் நிலத்தில் எரு உரம், கோழி உரம், எள்ளு புண்ணாக்கு, மணிலா புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு உள்ளிட்டவற்றை நிலத்தில் போட்டு நன்கு உழுதேன். கோழி கழிசலை அருகில் இருக்கும் கோழிபண்ணைகளில் இருந்து வாங்கி வந்து 1 வருடம் வரை பதப்படுத்தி நிலத்திற்கு உரமாக பயன்படுத்தினேன்.

கருணைகளை நிலத்தில் அரை அடிக்கு குழி தோண்டி ஊன்றினேன். நிலத்திற்கு சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறேன். மற்றவர்களை போல சொட்டுநீர் குழாய்களை தரையில் இருந்து இல்லாமல் பந்தல் மேல் பொருத்தி நிலத்திற்கு தண்ணீர் விடுகிறேன். கோவை கருணைகளை நிலத்தில் நடவு செய்த 15 வது நாளில் கொடிகள் பந்தல் மேல் ஏறிவிடும். 75 வது நாளில் கொடிகளில் இருந்து பூக்கள் வரதொடங்கிவிடும். அந்தப் பூக்களை கிள்ளி மீண்டும் நிலத்திலேயே உரத்திற்காக போட்டுவிடுவேன். அப்போது அதிகம் கொடிகள் வரும். கோவக்காயின் சாகுபடியும் அதிகரிக்கும். என்னுடைய நிலத்தில் பெரும்பாலும் களைகள் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு காரணம் கொடிகளின் அடிபாகத்தில் நிலப்போர்வை போட்டு மூடியுள்ளேன்.

மூன்றாவது மாதத்தில் இருந்து கொடிகளில் இருந்து பூக்கள் அதிகம் வரத்தொடங்கும். இதில் இருந்து கிடைக்கும் கோவக்காய்களில் மட்டுமே பறிப்போம். இரண்டு நாட்களுக்கு ஒரு அறுவடை செய்வோம். ஒரு அறுவடையில் 55 கிலோ கோவக்காய் கிடைக்கும். இதனை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்துவிடுவேன். ஒரு கிலோ கோவக்காய் ரூ.20 லிருந்து ரூ50 வரை விற்பனையாகும். சராசரியாக ஒரு கிலோ கோவக்காயை வியாபாரிகளுக்கு ரூ.25 க்கு விற்பனை செய்கிறேன். ஒரு மாதத்தில் கோவகாயில் 825 கிலோ கிடைக்கும். இதனை விற்பனை செய்யும் போது ரூ.20625 வருமானமாக கிடைக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை காய்ந்த கொடிகளை வெட்டிவிடுவேன். அந்த சமயத்தில் மீண்டும் ஒரு முறை எரு உரம், தொழு உரம், கோழி உரம் போடுவதற்கு மட்டும் ரூ.5 ஆயிரம் செலவாகும். கோவக்காயில் மட்டும் வருடத்திற்கு சராசரியாக 2 லட்சம் வரை லாபம் எடுக்கலாம். இது போக கோவை கருணை மற்றும் கோவை பதியத்தையும் விற்பனை செய்கிறேன். இதன்மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது என மகிழ்கிறார் விவசாயி தனுசு.
தொடர்புக்கு:
தனுசு: 96550 29777

The post அள்ளிக் கொடுக்கும் கோவக்காய்! appeared first on Dinakaran.

Read Entire Article