
விழுப்புரம்,
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திருப்புகழ் வீதியை சேர்ந்தவர் கருணாநிதி மகன் மனோஜ்குமார் (வயது 24). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 3 நாட்களாக வயிற்றுப்போக்கு இருந்து வந்தது.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் இருந்து சிக்கன் நூடுல்சை வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். அவர் வயிறு முட்டும் அளவிற்கு நூடுல்சை விரும்பி சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவில் அவருக்கு திடீரென உடல் உபாதை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே மனோஜ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் மனோஜ்குமாரின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதில், அவர் 3 நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் அளவுக்கு அதிகமாக நூடுல்சை சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இறந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.