அல்வா எம்எல்ஏக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

12 hours ago 3

‘‘லட்சக்கணக்கில் செலவிட்டாலும் ஆண்டுக்கணக்கில் கப் அடிக்கும் ஏரியை சுத்தம் செய்யப்போறதா மீண்டும் கை வைத்துள்ளதாமே புல்லட் அரசு..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘சுற்றுலா பூமியான புதுச்சேரியில் பேட் ஏரி முக்கியத்துவம் வாய்ந்ததாம்.. இங்கு சுற்றுலா படகு விடப்பட்டிருந்த நிலையில் சிலர் இடையூறு ஏற்படுத்தி தடுப்பு போட்டார்களாம்.. தற்போது ஏரி கழிவுநீர் தேங்குமிடமாக மாறிடுச்சாம்.. அரசே நேரடியாக களத்தில் இறங்கி மழைநீர் வடிகால் பணியை தொடங்கியிருக்கு.. ஆனால் 3 ஆண்டுகள் கடந்தும் பணிகள் முழுமை பெறவில்லையாம்.. தேங்கிய கழிவுநீரால் ஏரி மாசடைந்து துர்நாற்றம் வீசவே சுற்றுப்புறவாசிகள் முகம் சுழிக்கிறாங்களாம்.. வருடா வருடம் லட்சக்கணக்கில் செலவிட்டாலும் வேலைகள் முழுமை அடையாததால் உள்ளூர் மக்களின் புலம்பல் ஒருபுறமிருக்க, பல லட்சம் கொடுத்து வாங்கிய கட்டுமான பொருட்களும் நீரில் மூழ்கி பாழாய் கிடப்பதால் மக்கள் நொந்துவிட்டார்களாம்.. மீண்டும் நிதி ஒதுக்கி அதிகாரிகளை மாற்றிய புல்லட்சாமி அரசு ஏரி வேலையில் சுறுசுறுப்புடன் கைவைத்துள்ளதாம்.. இப்போதாவது விடிவு பிறக்குமா என்ற புலம்பல்தான் உள்ளூர் மக்களிடத்தில் இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சைலண்ட் மோடில் இருக்கும் இலைக்கட்சி நிர்வாகிகளை தேசியக்கட்சிக்கு இழுப்பதுதான் புதிய தலைவருக்கு முதல் அசைன்மென்டாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அல்வா ஊரின் எம்எல்ஏவுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. தேசியக் கட்சியின் மாநில தலைவர் ஆகப் போகிறார் என்பதை விக்கியானந்தாவாகிய யாம் தான் முதலில் சொன்னோம். அவருக்கு மலையான தலைவர் செக் வைத்துள்ளதையும் அப்டேட் செய்தோம். அதனால் தான் தேசியக் கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு 10 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற திடீர் விதி வந்ததாம்.. ஆனால் விதியையும் மாற்றி, நாம் சொன்னது போல அல்வா ஊரின் எம்எல்ஏ மலராத தேசியக் கட்சியின் தலைவர் பதவியை பிடித்து விட்டார். அது மட்டுமல்லாது தேசியக் கட்சி, இலைக்கட்சியுடன் கூட்டணி என்று மீண்டும் ஒட்டிக்கொண்டது. இலை கட்சியில் இருந்து பிரிந்து போனவர்கள், ‘சைலண்ட் மோடில்’ இருப்பவர்களை தேசிய கட்சிக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் அல்வா ஊரின் எம்எல்ஏவுக்கு முதல் ‘அசைன்மென்டாம்’.. இலைக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து விட்ட நிலையில், கூடவே இருந்து கரையான் போல நமது கட்சியை அரிக்கப் போகிறாங்க.. நமது விரலையே வைத்து நமது ‘கண்ணை நோண்டுறாங்க’ என தேசியக் கட்சியின் கூட்டணியை பார்த்து இலைக் கட்சியினர் மிரண்டு போய் இருக்கிறார்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சியில் தேனிக்காரர் மீண்டும் சேருவதற்கான வாய்ப்பு குறைந்து விட்டதால் அவரது அணியினர் எதிர்காலம் என்னவாகுமோ என புலம்புறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியுடன் மீண்டும் தேனிக்காரர் சேருவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறதாம்.. இதனால் தேனிக்காரர் அணியில் இருந்தால், அரசியல் எதிர்காலம் என்னவாகும் என அவருடைய ஆதரவாளர்கள் புலம்பி வருகிறார்களாம்.. ஒவ்வொரு முறையும், பிரச்னை வரும்போது, சிறிது காலம் பொறுத்திருங்கள், நமக்கான காலம் வந்து விடும் என சொல்லி அவருடைய ஆதரவாளர்களை சமாதானப்படுத்தி வந்தாராம்.. இனிமேல், அவர்கள் கட்டுக்குள் வைத்திருப்பது கடினமாம்.. இந்தநிலையில், வைத்தியானவரை சந்தித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த நிர்வாகிகள் முடிவு செய்துள்ளார்களாம்.. இதில், அதிரடி மாற்றம் நடந்தாலும் ஆச்சரியமில்லையாம்.. வைத்தியானவரின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம் என்கின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வசூலில் கொட்டி கட்டி பறக்கும் துணை சர்வேயர் ஒருவரின் தினசரி வருவாய், சொத்து பட்டியல் விவரங்களை ரகசியமாக சேகரிக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாவட்டத்துல கிணற்றினை பெயராக கொண்ட தாலுகா அலுவலகத்தில் துணை சர்வேயர் ஒருவர் வசூலில் கொடி கட்டி பறக்கிறாராம்.. விவசாயிகள் தங்களோட நிலங்களுக்கு கூட்டு பட்டா வைத்திருப்பதால் தனி சப்-டிவிசன் செய்து தரக்கோரி சர்வே பிரிவில் ஏராளமான விண்ணப்பங்கள் குவிகின்றதாம்.. ஆனா இந்த விண்ணப்பங்கள் மேல எந்த நடவடிக்கையும் எடுக்காம சொத்து பிரச்னை தொடர்பாக கோர்ட்டுகளில் வழக்கு நிலுவையில் இருக்கிறதை மட்டும் தேர்வு செய்து துணை சர்வேயர் டிஜிட்டல் சர்வே செய்து கொடுத்து கை மேல் பலனடைந்து வருகிறாராம்.. அதுவும் சம்பந்தப்பட்ட விஏஓ, ஆர்.ஐ ஆகியோருக்கு கூட தகவல் தெரிவிக்காமலேயே தனி ஆளா சென்று சர்வே செய்து வரைபடம் போட்டு கொடுத்து எதிர் தரப்புகிட்ட பல லகரங்களை கறந்து விடுகிறாராம்..
சமீபத்தில் வண்டி தடம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிற நிலையில், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக துணை சர்வேயர் நிலத்தை அளவீடு செய்து கொடுத்திருக்கிறார். வழக்கு நிலுவையில் இருக்கும் போது நிலத்தை அளவீடு செய்தது சட்டப்படி தவறுன்னு சொல்லி பாதிக்கப்பட்ட தரப்பினர் மாவட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்காங்க.. உயர் அதிகாரி ஒருவரின் ஆசி இருக்கிறதால நடவடிக்கையில் இருந்து துணை சர்வேயர் தப்பித்துக்கொண்டாராம்.. ஆனாலும் துணை சர்வேயர் மீது நடவடிக்கை எடுக்கிற வரைக்கும் விடமாட்டோம்னு ஒரு குரூப் அவரோடு தினசரி வருவாய், சொத்து பட்டியல் விவரங்களை ரகசியமாக சேகரிச்சு விஜிலென்ஸ் பார்வைக்கு கொண்டு செல்ல திட்டம் போட்டு இருக்கிறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post அல்வா எம்எல்ஏக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article