அல்வா எம்.எல்.ஏ.க்கு பதவி கிடைக்குமா என்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

1 day ago 3

‘‘மலராத கட்சி தலைவர் பதவிக்கு மல்யுத்தம் நடக்குது போல..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கும் நிலையில் தேசிய கட்சியை உதறி இருந்த இலை கட்சி மீண்டும் பழைய நட்பில் ஒட்டிக் கொண்டுள்ளது. இதற்காக தலைநகருக்கு விசிட் அடித்த சேலம்காரர் தேசிய கட்சியின் நம்பர் 2 தலைவரை சந்தித்துப் பேசினார். சிறிது காலம் எலியும், பூனையுமாக இருந்த தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் புகையாமல் இருக்குமா? அது தான் தற்போது அரசியல் பரபரப்பை கூட்டியிருக்கு.

சேலம்காரர் தனது சந்திப்பின் போது மலையான தலைவரை பதவியில் இருந்து கழற்றினால் தான் கூட்டணி என நிபந்தனை விதித்தாராம். அதனால் தான் ஏற்கெனவே இருந்த கூட்டணி சிதறிப் போச்சு என தனது வாதத்தையும் சேலம்காரர் முன் வைத்தாராம். இந்நிலையில் தேசிய கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு யார் என குடுமிப்பிடி சண்டை தொடங்கியிருக்கு. இதற்காக அல்வா ஊரின் எம்எல்ஏ, முன்னாள் தலைவராக இருந்த பெண்மணி, தற்போதைய பெண் எம்எல்ஏ என பெரிய பட்டியல் நீளுகிறதாம்.

தேர்தல் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இலை கட்சியை அனுசரித்துப் போக அல்வா ஊரின் எம்எல்ஏ தான் சரியான ஆள் என டெல்லி மேலிடம் கருதுகிறதாம். அல்வா ஊரின் எம்எல்ஏ ஏற்கெனவே இலை கட்சியில் இருந்தவர். மம்மி மறைவுக்கு பின் அவர் தேசிய கட்சியில் இணைந்து எம்எல்ஏ ஆனார். தற்போது சட்டமன்ற கட்சித் தலைவரும் அவர் தான். அவருக்கு இலை கட்சியின் தலைவர்களின் நாடித்துடிப்பு தெரியும். அனுசரித்துப் போவார் என்று தேசிய கட்சியின் தலைமை நம்புகிறதாம்.

இதனால் நீண்ட காலமாக மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தத அல்வா எம்எல்ஏக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது என தென்மாவட்டத்தில் கட்சியில் ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகள் குஷியாகியுள்ளனராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நல்லவரா, கெட்டவரானு தெரியாம குழம்பிக் கிடக்கிறாங்களாமே.. என்னா விஷயம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவையில் சமீபத்தில் ஆர்டிஓ அதிகாரிகள் பணியிட மாற்றம் செஞ்சாங்க. இதுல இன்ஸ்பெக்டராக இருந்த ஒருத்தர் இப்போ கோவை வடக்கு ஆர்டிஓவிற்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவரு சென்ட்ரல் ஆர்டிஓவையும் கவனிச்சுட்டு வராரு.

இவரு இன்ஸ்பெக்டராக இருக்கும்போது அப்படி இப்படின்னு இருந்தாராம். எந்த வேலை என்றாலும் செய்து கொடுப்பாராம். இப்போ ஆர்டிஓ பதவி வந்ததும் புதிய அவதாரம் எடுத்து இருக்கிறாராம். புதுசா பதவி ஏற்ற அவரை ஏஜென்சிகள் பார்த்து இருக்காங்க, அப்போ அவங்க கிட்ட இனி ஆர்டிஓ பேரை சொல்லி யார்கிட்டேயும் காசு வாங்கக்கூடாதுனு சொல்லி இருக்கிறார். அட நம்ப இன்ஸ்பெக்டரா இதுனு ஏஜென்சிகள் சொல்லிட்டு கிளம்பி இருக்காங்க. அப்பறம் மறுநாள், முன்னாடி இருந்த ஆர்டிஓ போட்ட லிஸ்ட்களை மாற்றி எல்லாத்துக்கும் ரூ.500, ரூ.1000 கூட்டி இருக்கிறார். எல்லா ரேட்டையும் அதிகப்படுத்தி இருக்கிறார்.

இதனால ஏஜென்சிகாரங்க ஆர்டிஓ கிட்ட தகராறு பண்ணி இருக்காங்க. என் பேரை சொல்லி காசு வாங்காதீங்கனு சொல்லிட்டு ரேட் ஏன் இப்படி அதிகம் செஞ்சு இருக்கீங்கனு கேள்வி கேட்டு இருக்காங்க. அப்போ ஆர்டிஓகாரர் இஷ்டம் இருந்தா இருங்க இல்லனா? என் சோன் விட்டு வெளியே போங்கனு சொல்லி விட்டாராம். இவரு நல்லவரா, கெட்டவரானு தெரியாம ஏஜென்சிகள் குழப்பத்துல இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காக்கி வட்டார சேதி ஏதுமிருக்கா..’’ என கேட்டார். ‘‘சுற்றுலா நகரமாக விளங்கும் புதுச்சேரியில் பாதுகாப்பை அதிகரிக்க காக்கிகளை பலப்படுத்த வேண்டுமென்ற கோஷம் எதிரொலித்து உள்ளதாம்.

ஆனால் நியமனமும், இடமாற்றமும் ஆமை வேகத்தில் நகர்வதால் பெரும்பாலான காக்கிகள் வேலைப்பளு அதிகமாகி மன உளைச்சலில் இருக்கிறார்களாம். அடுத்தடுத்த மாதங்களில் 8 கண்காணிப்புகள் வரிசையாக ஓய்வுபெற உள்ளார்களாம். ஏற்கனவே காலியான காரை இடத்துக்கு புதிய கண்காணிப்பாளர் நியமிக்கப்படாத நிலை இன்னமும் தொடர்கிறதாம். தற்போதைக்கு ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இடமாற்றல் உத்தரவுகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக பதவி உயர்வுக்காக காத்திருக்கிறார்களாம்.

ஒருவர் கையில் சாட்டை இருந்தால் பரவாயில்லை, பலர் சாட்டை சுற்றும் நிலை இருப்பதால்தான் இதுபோன்ற தாமதநிலை என்ற புலம்புலை தொப்பிகளிடம் பரவலாக கேட்க முடிகிறதாம். பொதுத் தேர்தல் நெருங்குவதால் பதவி உயர்வுக்கு தகுதியான ஆய்வாளர்கள் புதிய நம்பிக்கையில் காத்திருப்பதாக கூறுகிறார்கள்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஒரு இடத்தில் டியூட்டி பார்க்க தயங்கும் ஒயிட் காக்கிகள், இன்னொரு இடத்தில் டியூட்டி பார்க்க பார்க்க போட்டிப்போடுறாங்களாமே என்னவாம்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டத்துல சத்தான லிமிட்ல ஒயிட் காக்கிகள் ஸ்டேஷன் இயங்கி வருகிறது.. இந்த ஸ்டேஷல மொத்தமாக 10 பேர் பணியாற்றி வர்றாங்க.. இதுல 2 ரைட்டர், 3 டிரைவர்னு டிராபிக் பணி செய்ய சொன்னால், தயக்கம் காட்டுறாங்களாம்.. 3 பேர் மட்டுமே டிராபிக் சரி செய்யும் பணியில் இருக்கிறாங்களாம்.. இதனால் சத்தான பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவித்து வர்றாங்களாம்.. பணியில இருக்கிற 3 பேரும், எஸ்பி, கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வந்து செல்லும் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே இருக்குற பாலத்துக்கு அடியில நின்னு டியூட்டி பார்க்குறாங்களாம்..

மற்ற ஏரியாவுல டிராபிக் ஆனாலும் பார்க்க ஆள் இல்லையாம்.. இங்க மட்டும் இப்படி நடக்குதாம்.. ஆனா, வெயிலூர் சிட்டி லிமிட்ல காக்கிகள் போட்டி போட்டு டியூட்டி பார்க்குறாங்களாம்.. இவங்க அவுட்டர்ல மட்டும் நின்னு டியூட்டி பார்க்குறாங்களாம்.. கனரக வாகனங்கள் சிட்டிக்கு உள்ள வர தடை செஞ்ச நேரத்துல, சில வாகனங்களுக்கு மட்டும் பச்சைகொடி காட்டி சம்திங் பார்த்துடுறாங்களாம்.. ஒயிட் காக்கிகள் ஒரு இடத்துல டியூட்டி செய்ய தயங்குறாங்க.. ஒரு இடத்துல டியூட்டிக்கு ரொம்ப ஆர்வம் காட்டுறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

The post அல்வா எம்.எல்.ஏ.க்கு பதவி கிடைக்குமா என்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article