வேளச்சேரி: அலுவலகத்தில் மற்றவர் முன்பு மனைவி சண்டை போட்ட விரக்தியில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேளச்சேரியை அடுத்த நன்மங்கலம், அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் பவன் குமார் (33). கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பவன்குமார் மனைவுக்கு இரவு பணி என்பதால் அவரை தனது பைக்கில் கொண்டு சென்று அலுவலகத்தில் விட்டுவிட்டு பவன்குமார் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
இதையடுத்து நேற்று காலை மனைவியை அழைத்துவர அவர் சென்றுள்ளார். அப்போது தனக்கு மீண்டும் மதியம் 2 மணிவரை வேலை உள்ளது என்றும், வேலை முடிந்தவுடன் தானே வீட்டுக்கு வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் கணவன் மணைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பவன்குமார் வீடு திரும்பினார். இதையடுத்து அவர் மனைவிக்கு போன் செய்து, எல்லோர் முன்னிலையிலும் என்னை அவமானம் செய்து விட்டாய், இதற்கு நீ வருத்தப்படுவாய் எனக்கூறி அழைப்பை துண்டித்து விட்டாராம்.
இதையடுத்து மனைவி இரவு 10.30 மணியளவில் போன் செய்ததற்கு பவன்குமார் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மனைவி, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களை சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பாத்தபோது படுக்கை அறையில் பவன்குமார் தூக்குபோட்டு பிணமாக கிடந்தார்.
இதையடுத்து சம்பவம் குறித்த மேடவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மனைவியுடன் பணியாற்றுபவர்கள் எதிரிலேயே அவர் சண்டை போட்ட அவமானம் தாங்க முடியாமல் பவன்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
The post அலுவலகத்தில் மற்றவர் முன்பு மனைவி சண்டை போட்ட விரக்தியில் கணவன் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.