அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்க கூடாது; இரவு நேரங்களில் விசாரணை நடத்தக் கூடாது: அமலாக்கத்துறை புதிய உத்தரவு

3 weeks ago 4

புதுடெல்லி: பணமோசடி தொடர்பாக ஒருவரை இரவு நேரங்களில் விசாரணைக்கு அழைக்க கூடாது, அந்த நபரை அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்க கூடாது என அமலாக்கத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பையை சேர்ந்த 64 வயது நபரை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறையினர் அந்த நபரை இரவில் கைது செய்ததுடன், அலுவலகத்தல் நீண்ட நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அந்த நபர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை கடந்த 14ம் தேதி விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பிருத்விராஜ் கே.சவான் மற்றும் ரேவதி மொஹிதே தேரே ஆகியோர் அமர்வு, “அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த செயல் ஒருநபரின் தூக்கத்தையும், தனி உரிமையையும் பறித்துள்ளது. இதை ஏற்க முடியாது. பணமோசடி தடுப்பு சட்டம் பிரிவு 50ல் குறிப்பிட்டுள்ளவாறு அலுவலக பணி நேரத்தில் மட்டுமே ஒரு நபரை விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்ப வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை அலுவலகத்தில் நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது.

இதுதொடர்பான அறிவுறுத்தலை விசாரணை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். அந்த சுற்றறிக்கையை அமலாக்கத்துறை இணையதளம், எக்ஸ் பதிவிலும் வௌியிட வேண்டும்” என உத்தரவிட்டது. அதனடிப்படையில் அமலாக்கத்துறை வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ஒரு நபரை விசாரணைக்கு அழைக்கும்போது, விசாரணை நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் அந்த நபரை விசாரிப்பதற்காக நன்கு தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் நகல், வழக்குடன் தொடர்புடைய ஆவண ஆதாரங்கள் ஆகியவற்றுடன் விசாரணை அதிகாரி தயாராக இருக்க வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்படும் நபர் அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க விசாரணை நாள், நேரத்தை சரியாக நிர்ணயித்து அழைப்பாணை அனுப்ப வேண்டும்.

பணமோசடி குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு, விசாரிக்கப்படும் நபர் கைப்பேசி அல்லது பிற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறுகிய நேரத்தில் வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்கவோ அல்லது விசாரணையின் தன்மையை மாற்றவோ முயற்சிக்கலாம். இதைத்தடுக்க விசாரிக்க அழைக்கப்பட்ட நாளிலோ அல்லது அடுத்த நாளுக்குள்ளாகவோ விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும். நள்ளிரவு வரை விசாரணையை நீட்டிக்காமல், அலுவலக பணி நேரத்துக்குள் விசாரணையை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்படும் நபர் மூத்தகுடிமக்கள் அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களிடம் பகல் நேரத்தில் விசாரணையை முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்க இயலாதபோது பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்படும் வேறு நாளில் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்.

ஒருவேளை விசாரிக்கப்படும் நபரை விசாரணை முடியும்முன் வௌியேற அனுமதித்தால் அவர் குற்ற ஆதாரங்களை, சாட்சியங்களை அழித்து விடுவார் என விசாரணை அதிகாரி கருதினால், அதற்கான காரணத்தை வழக்கு கோப்பில் பதிவு செய்வதுடன், மூத்த அதிகாரியின் ஒப்புதல் பெற்று குறிப்பிட்ட நபரிடம் இரவு நேரத்திலும் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்யலாம்” என பல்வேறு அறிவுறுத்தல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

The post அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்க கூடாது; இரவு நேரங்களில் விசாரணை நடத்தக் கூடாது: அமலாக்கத்துறை புதிய உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article