பஞ்ச ப்ரஹ்மாஸந ஸ்திதா
நாமத்தின் தொடர்ச்சி...
அம்பிகையை அகத்தே தரிசித்ததால், என்ன மாற்றம் நிகழ்கிறதெனில், மேலே சொல்லப்பட்ட எதையெல்லாம் வெளியில் அனுபவித்தானோ அதெல்லாம் இவனுக்கு அந்தர்முகமாக திரும்புகின்றது. இந்த மெய், வாய், கண், மூக்கு செவி என்பதும் அந்தர்முகமாக திரும்பி, ஞானேந்திரியங்களும், தன் மாத்திரைகளும், பஞ்ச பூதங்களும் அந்தர்முகமாக திரும்பும்போது இவையாவும் அந்த பஞ்ச பிரம்மாக்களிடம் சென்று நிற்கின்றது. அந்த பஞ்ச பிரம்மாக்களிடம் திரும்பும்போது அவன் காணும் மாற்றம் என்னவெனில், இவை அனைத்தையும் தனக்குக்கீழ் ஆசனமாகக் கொண்டு ஆத்ம சொரூபமாகக் கொண்டு அம்பாள் இருக்கிறாள். ஆத்ம சொரூபம் இந்த பஞ்ச பிரம்மாக்களையே ஆசனமாகக் கொண்டது. இதை நாம் புரிந்துகொள்ளாமல் பஹிர்முகம் என்கிற வெளியுலகமாகச் சென்று சின்னச் சின்ன விஷயங்களில் அனுபவித்துக் கொண்டிருந்தோமே… என்று உணருகிறான். வெளியுலகில் எது பிரிந்து கிடந்ததோ அதுவே உள்முகமாக பார்க்கும்போது பஞ்ச பிரம்மாக்களின் ஒருமித்த சக்தியோடு அம்பிகை சித்சக்தியாக இருப்பதை உணருகிறான். இப்போது limited I என்பதுபோய், அகண்டாகார விருத்தியோடு கூடிய ஆத்மாகாரமாக லலிதாம்பிகையாக உள்ளுக்குள் தரிசிக்கிறான்.
வெளியிலிருந்து உள்முகமாக இந்த நாமம் திருப்புகின்றது. வெளியில் fragmentations ஆக இருந்தது உள்ளே ஒரே வஸ்துவாக இருப்பதை அனுபூதியில் தரிசனத்தில் உணர்வான். எனவே, இந்த நாமத்தின் உட்பொருளை மனதால் கிரகித்தாலே போதும். தன்னுடைய எல்லையை உணர்ந்து அடங்கும். அந்த அடங்கும் தன்மையே உள்ளுக்குள்ளும் திருப்பும். குருவும் அம்பிகையும் உள்ளே பார் என்றால் பார்க்க வேண்டும். எப்படி? எப்படி? என்று கேட்டுக் கொண்டேயிருந்தால் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். ஒருகாலும் உள்ளுக்குள் இந்த அகங்காரம் பார்க்க விடாது. ஏனெனில், உள்ளே இருக்கும் பிரம்மாண்டத்தின் அகண்டத்தின் தன்மையை இது அறியாது. ஞானிகள் சொல்வதுபோல, உள்ளே இருப்பதுதான் வெளியிலே விரிந்திருக்கிறது என்கிற உண்மையை அம்பிகையின் அருளால், மின்னல் போன்ற அவளின் தரிசனத்தில் உணருகின்றான்.
இதற்கான கோயிலாக ஜகந்நாயகி என்கிற பெயரில் அம்பிகை அருளும் வங்காரப் பேரையூர் எனும் தலத்தில் அருளும் அம்பிகையை தரிசிக்கலாம். இந்த தலத்தை திருப்பேரெயில் என்றும், ஓகைப் பேரையூர் – வங்காரப் பேரையூர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். இறைவனின் திருப்பெயர் – ஜகதீஸ்வரர். அம்பிகையின் பெயர் – ஜகந்நாயகி. அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்ற தலமாகும்.திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் கமலாபுரத்திற்கு அடுத்துள்ள மூலங்குடி சென்று இத்திருத்தலத்தை அடையலாம். திருவாரூரில் இருந்து மாவூர்ரோடு – வடபாதி மங்கலம் சாலை வழியாகவும் இத்திருத்தலத்திற்கு வந்து அடையலாம்.
மஹா பத்மாடவீ ஸம்ஸ்தா
நாம் தொடர்ச்சியாக லலிதா ஸஹஸ்ரநாமத்தினுடைய நாமங்களின் ஆழ்ந்த பொருளை பார்த்துக்கொண்டே வருகின்றோம். ஒவ்வொரு நாமமும் ஒரு பிரம்மாண்ட வஸ்துவை, சக்தியை வெளிப்படுத்தியபடி இருப்பதை பார்க்கின்றோம். ஒவ்வொரு நாமத்தின் இலக்குமே அந்த பிரம்மம் அல்லது அம்பிகை என்கிற விஷயத்தின் அளவிலா பிரம்மாண்டத்தை, பேரழகை , விகசிப்பை, பேருணர்வை, பேரின்பத்தை… விளக்க முயற்சிப்பதைப் பார்க்கின்றோம். நாம் தீபாவளியன்று ராக்கெட்டோ அல்லது வாண வெடியில் நெருப்பு வைக்கின்றோம். கீழே மருந்தை ஏற்றிக்கொண்டு மேலே போய் வெடிக்கும்போது அதிலிருந்து வண்ணம் வண்ணமாய் பூக்கள் போல வானம் முழுவதும் தீப்பொறிகள் நட்சத்திரங்கள் போலச் சிதறும் அழகை அனுபவித்திருப்போம். அதுபோல இந்த ஒவ்வொரு நாமத்தின் பொருளும் வானவீதியில் வெடித்துச் சிதறும் அக்னிப் பூக்கள்போல… நம்
மனதிலும் நிகழ வேண்டும்.
இந்த நாமங்கள் அம்பிகையைப்பற்றி மட்டுமே பேசுகின்றன. சிவசக்தி சொரூபத்தின் பேரழகை வர்ணிக்கின்றன. நாம் நம்மைச் சிறியகூட்டுக்குள் அடைத்துக் கொண்டிருக்கும் தனிமனிதனாக… சிறை ப்பட்டவனாக… சரீரம் என்கிற சிறு கூட்டில் வசிக்கும் எல்லைக்குட்பட்ட பறவையாக… கிணற்றில் வசிக்கும் தவளைபோல… வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், லலிதா சஹஸ்ரநாமம் நம்மை விழித்தெழ வைக்கின்றது. நீ வேறு வேறாக உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாய். உன்னை நிறைய பிரச்னைகள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. என்ன செய்வது என்று மனதைக் கொண்டும், எண்ணங்களைக் கொண்டும், ஏதேனும் எல்லா பிரச்னைகளையும் நிரந்தரமாகச் சரிசெய்து விடலாம் என்று நினைக்கிறாய். ஆனால், இங்கு பிரச்னையே வேறு. நீ யார் என்று அறிய வேண்டும். அப்படி அறிவதற்கு முன்பு கொஞ்சம் உன்னைப்பற்றியே… அதாவது நீ என்று உன்னை நம்பிக்கையை கொஞ்சம் விடுத்து உலகத்தை பார். இந்த படைப்பைப் பார். படைப்பது எப்படி இயங்குகிறது என்று பார். யாரால் இவை அனைத்தும் இயக்கப்படுகின்றது. வானம்… நட்சத்திரம்… சூரியன்… சந்திரன்… விண்வெளி… அழகிய பெண்… குழந்தை… ஓசை… இசை… மென்மையாக கால் பாவி நடக்கும் பெண்ணின் கொலுசு… முகம், உதடு, கண்கள், அழகிய பற்கள், கால், பாதம்… என்று எல்லாமுமே இங்கு யாரால் படைக்கப்பட்டு காக்கப்பட்டு மீண்டும் அதையெல்லாம் அழித்து மீண்டும் படைத்து… இந்த அலகிலா விளையாட்டை நிகழ்த்துகிறாளே அவள் யாரென அறிந்து கொள் என்று சொல்வது இந்த லலிதா சஹஸ்ரநாமம்.
நீ எதை எதையெல்லாம் இந்த உலகில் மேன்மையானதாகவும், உயர்ந்ததாகவும் வைத்துக் கொண்டிருக்கிறாயே… அதையெல்லாம் இயக்குபவள் அவளே என்று நம் மனதை ஸ்தம்பிக்கச் செய்வதே இந்த லலிதா சஹஸ்ரநாமத்தின் இலக்காகும். எனவே, மீண்டும் மீண்டும் லலிதா சஹஸ்ரநாமத்தையும் கூடவே அது சுட்டும் ஆழ்ந்த பொருளையும் புத்தியால் எவ்வளவு தூரம் முடியுமோ அத்தனை தூரம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த புத்திக்கு விளங்கும் சக்தியையும் அம்பிகையேதான் அளிப்பாள். நம்மிடத்தில் உள்ள ஒரே ஒரு முயற்சி என்று நம்முடைய சிரத்தையை வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஒரு கட்டத்தில் அந்த சிரத்தையையும் அவளே அளிப்பாள் என்பதும் புரியத் தொடங்கும்.
இப்போது நாம் பார்க்கப்போகும் நாமமானது மஹா பத்மாடவீ ஸம்ஸ்தா என்பதாகும். இதற்கு முன்பு ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா… ஸ்ரீ மந் நகர நாயிகா, சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா, பஞ்ச பிரஹ்மாஸன ஸ்திதா… என்று பார்த்துக் கொண்டே வந்தோம். இப்போது பஞ்ச பிரஹ்மாஸன ஸ்திதா என்பது அம்பிகையினுடைய ஸ்தானம். சென்ற நாமத்தில் சொன்னதுபோல அம்பிகையினுடைய இருப்பிடத்தையும், இன்னும் சொல்லப்போனால் அம்பிகையினுடைய விலாசம் போல பல விஷயங்களையும் பார்த்தோம். அதுபோலவே அந்தந்த நாமங்களினுடைய தத்துவார்த்தத்தையும் பார்த்தோம். அதாவது அம்பாளினுடைய அரண்மனையான சிந்தாமணி கிரஹம், அதற்குள் இருக்கக்கூடிய ஸ்ரீ சக்ராஹாரமான பீடம், அதற்குள் இருக்கக்கூடிய அம்பிகையினுடைய பிந்து ஸ்தானம். அது எப்படி இருக்கிறதெனில் பஞ்ச பிரஹ்மாஸனாமாக இருக்கிறது, பஞ்ச பிரஹ்மாஸன ஸ்திதா என்று பார்த்தோம்.
இப்போது அந்த ஸ்தானத்தை பார்த்ததற்குப் பிறகு வரக்கூடிய இரண்டு நாமங்கள் என்ன நமக்கு காண்பித்துக் கொடுக்கிறதெனில், ஒரு அரண்மனை இருக்கிறது. ஒரு ராஜா… ஒரு ராணி… இருப்பார்கள். அப்போது அவர்களுடைய தர்பார் ஸ்தானம் என்று ஒன்று இருக்கும். அதுதான் அவனுடைய உண்மையான சிம்மாசன ஸ்தானமாகும். ராஜாவினுடைய ஸ்தானம் சிம்மாசனம்தான் என்றாலும்கூட, மற்ற நேரங்களில் அது அதற்கென்று ஒரு இடம் இருக்கும். அதிலிருப்பார்கள். உதாரணமாக மந்திரியோடு தனிமையில் அமர்ந்து பேசுவதற்கும், தனிப்பட்ட குடும்ப உரையாடல்களுக்கும் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடமிருக்கும், மக்களை சந்திப்பதற்கு என்று தனியிடம் இருக்கும். இதுபோன்று வெவ்வேறு இடங்களில் அவர்களுடைய ஆதிக்கமும் இருப்பும் இருக்கும். ஒரு சாதாரண மன்னனே இப்படி இருக்கிறானெனில், சிருஷ்டி, ஸ்திதி, திரோபாவம் செய்கின்ற அம்பிகையானவள், இப்படி எல்லாவற்றிலுமாக ஆதிக்கம் செலுத்துபவளாக இருப்பதால், பல இடங்களில் பல ஸ்தானங்களில், நாம ரூபங்களோடு தன்னுடைய வேலையை செய்கிறாள். மீண்டும் ஒருமுறை இதற்கு முந்தையை நாமங்களை நினைவுகூர்வோம். ஸுமெரூ சிருங்க மத்யஸ்தா முதல் பஞ்ச பிரஹ்மஸான ஸ்திதா வரையிலும் அம்பிகையினுடைய முக்கிய ஸ்தானமாகும். ஆனால், இந்த ஸ்தானம் தவிர அம்பிகைக்கு அந்த ஸ்ரீ நகரத்திற்குள்ளும் சரி, இன்னும் சில முக்கிய ஸ்தானம் இருக்கிறது. எல்லாமே அவளாகவே வியாபித்திருக்கிறாள் என்பது ஒரு பக்கமாக இருந்தாலும், அதேபோலவே இன்னும் சில ஸ்தானங்கள் ஸ்ரீ வித்யாவில் அம்பாளுக்கு சொல்லப்படுகின்றது.
அப்படி இன்னும் சில ஸ்தானங்கள் சொல்லப்படுவதில்தான், இப்போது நாம் பார்க்கப்போகிற மகா பத்மாடவி ஸம்ஸ்தா என்கிற விஷயம் வருகின்றது. இங்கு பத்மாடவி என்றொரு இடம் இருக்கிறது. இது எங்கு இருக்கிறதெனில், நாம் கொஞ்சம் இருபத்தைந்து கோட்டையை இதற்கு முன்பு பார்த்தோமல்லவா… இப்போது கொஞ்சம் அதற்கு வெளியே வந்து, இருபத்தைந்தாவது கோட்டையாக சிருங்காரக் கோட்டை என்று ஒன்று பார்த்தோம். அந்த சிருங்கார கோட்டையானது மன்மதனுடைய ஸ்தானம் என்றும் பார்த்தோம். அதற்கு அடுத்து சிந்தாமணி கிரஹம் இருக்கிறது. இப்போது இந்த சிந்தாமணி கிரஹத்திற்கும் சிருங்கார கோட்டைக்கும் நடுவே ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்திற்கு மஹாபத்மாடவி என்று பெயர். அடவி என்றால் காடு என்று அர்த்தம். மகா பத்மாடவி என்றால் பெரிய தாமரைக் காடு என்று அர்த்தம். அதெப்படி தாமரை ஒரு காடாக இருக்கும் என்று நமக்கு சந்தேகம் வரலாம். ஏனெனில், தாமரையானது குளத்தில் பூக்கக்கூடியது. தாமரை எப்படி காடாக இருக்க முடியும். மரங்கள் நிறைய இருந்தால் காடாக முடியும். ஆனால், தாமரை எப்படி காடாக முடியும் என்றெனில், இதற்கு முந்தைய நாமங்களை துர்வாசர் இயற்றிய லலிதா ஸ்தவ ரத்னத்தின் துணையோடு பார்த்ததுபோல இந்த நாமத்தின் பொருளையும் லலிதா ஸ்தவ ரத்னத்தின் துணையோடுதான் பார்க்க வேண்டும். ஏனெனில், ஆர்யா த்விசதி என்கிற லலிதா ஸ்தவ ரத்ன ஸ்தோத்திரத்தில்தான் விளக்கமாக சொல்லியிருக்கிறார். அப்போது அவர் மகாபத்மாடவிக்கு ஒரு விளக்கம் கொடுக்கிறார். அது என்ன விளக்கமென்று பார்ப்போம் வாருங்கள்.
அந்தத் தாமரைப் பூக்களெல்லாம் எப்படி இருக்குமெனில், பத்து பனை மரங்கள் சேர்ந்தால் எவ்வளவு பெரிய ஒரு விஸ்தீரணம் இருக்குமோ அவ்வளவு விஸ்தீரணத்தோடு கூடிய தண்டுகள் இருக்குமாம். அந்த தண்டுகளைச் சுற்றிலும் தங்கத்திலேயே செய்யப்பட்ட இலைகள் இருக்குமாம். அப்போது பத்து பனைமரங்களின் உயரத்திற்கு மேலே ஒரு தாமரை எப்படி இருக்குமென்று நாம் கொஞ்சம் மனக் கண்ணால் நினைத்துப் பார்த்தால்தான் அது நமக்கு புரியவரும். அப்போது அவ்வளவு பெரிய தாமரைப் பூக்களும், அந்த பூக்களுக்குள் சென்று பார்த்தால் கேசரங்கள் இருக்குமல்லவா… அதாவது மகரந்தத்தை ஏந்தியிருக்கும் அந்த கேசரங்கள் இருக்குமல்லவா அந்த ஒவ்வொரு கேசரமும் ஒவ்வொரு பனைமரம் அளவிற்கு இருக்குமெனில், அப்போது அந்த தாமரை எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.
(சுழலும்)
The post அலகிலா விளையாட்டுடைய அம்பிகை appeared first on Dinakaran.