அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு ரத்து மதரசா சட்டம் செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: எதிர்க்கட்சிகள் வரவேற்பு

2 weeks ago 3

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்த கடந்த 2004ம் ஆண்டு மதரசா கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டது. மாநில அரசு இயற்றிய இச்சட்டத்தின் கீழ், உபி மதரசா கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 16,000க்கும் மேற்பட்ட மதரசாக்களில் 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த சட்டம் அரசியலமைப்புக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரானது என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சட்டத்தை ரத்து செய்து, மதரசாக்களை மூடுமாறும், அதில் படிக்கும் மாணவர்களுக்கு வழக்கமான கல்வி நிறுவனங்களில் பயில ஏற்பாடு செய்யுமாறும் உபி அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில், ‘‘மதச்சார்பின்மை அடிப்படையில் ஒரு சட்டத்தை ரத்து செய்ய முடியாது. மேலும், அரசியலமைப்பின் சில விதிகள் சட்டத்தில் முரணாக இருப்பதற்காக முழு சட்டமும் ரத்து செய்யப்பட வேண்டியதில்லை. எனவே உபி மதரசா சட்டம் செல்லும். அதே சமயம் மதரசாக்கள் வழங்கும் உயர்கல்வி சான்றிதழ், யுஜிசி சட்ட விதிகளுக்கு முரணாக இருக்கிறது. மாநில அரசின் சட்டத்தால் உயர்கல்வியை ஒழுங்குபடுத்த முடியாது’’ என உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்பை இஸ்லாமிய அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன.

 

The post அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு ரத்து மதரசா சட்டம் செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: எதிர்க்கட்சிகள் வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article