*பள்ளி ஆண்டு விழாவில் விஞ்ஞானி பேச்சு
ஊட்டி : அறிவியல் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளது. மாணவ, மாணவிகள் அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஊட்டி கிரசன்ட் பள்ளி ஆண்டு விழாவில் இஸ்ரோ விமான இயக்கவியல் குழு விஞ்ஞானி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி கிரசன்ட் கேசில் பப்ளிக் பள்ளியின் வெள்ளி விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் உமர் பாரூக் தலைைம வகித்தார். பெங்களூர் இஸ்ரோ யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் விமான இயக்கவியல் குழு விஞ்ஞானி பிரபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து பேசியதாவது:
அறிவியல் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளது. அதை இன்றைய மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் இளம் தலைமுறையினரின் கவனத்தை திருப்ப வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உள்ளன. அதனை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்தும் போது நல்ல பலன் கிடைக்கிறது. பொறியியல் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் அறிவியல், கணிதம் என பல துறையிலும் வேலை வாய்ப்புகள் உள்ளது.
தற்போது தொழில்நுட்பங்கள் சிறப்பாக உள்ளது. கவனத்தை சிதறவிடாமல் சிறப்பாக செயல்படுபவர்கள் வெற்றி பெற முடியும். இன்றைய மாணவர்கள் ஏழை குடும்பத்தில் பிறந்த ஆராய்ச்சியாளர்களாய் மாறியுள்ள எங்களை போன்றவர்களை பார்த்து அவர்களும் அறிவியல் துறையில் வர உத்வேகமாக இருந்தால் அதுவே எங்களுக்கு வெற்றி தான்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகள் வண்ண வண்ண உடையில் நடனம், இலக்கியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்வி, விளையாட்டு மற்றும் பிற நிகழ்வுகளில் சாதித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அறிவியல் துறையில் வேலை வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.