கூடுவாஞ்சேரி: சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகள், பறவைகள் உள்ளன. இவைகளைகாண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணியாற்றிய தொழி லாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சார்பில், மாநில சிறப்பு தலைவர் இரணியப்பன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை பூங்கா நுழைவு வாயில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர்.
இதற்கு கிளாம்பாக்கம் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தடையை மீறி போராட்டம் நடத்தக்கூடாது என கூறி போலீசார் அங்கு அமைக்கப்பட்டு இருந்த பந்தல்களை பிடுங்கி எறிந்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து தொழிலாளர்களை பூங்கா நிர்வாக உயரதிகாரிகளிடம் அழைத்து சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘பணி ஓய்வு, இறப்பு போன்ற காரணங்களால் நிரந்தர தொழிலாளர் எண் ணிக்கையை குறைத்து மீண்டும் 200க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களை பணிக்கு எடுத்து, 15 ஆண்டுகளை கடந்து பணியாற்றி வருகிறார்கள்.
கலெக்டர் நிர்ணயம் செய்தபடி, இவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ.465 வழங்கப்படுகிறது. பூங்கா வளாகத்திற்குள் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக வைத்திருந்த சங்க கொடி மற்றும் பெயர் பலகையை பூங்கா நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி பழிவாங்கும் நோக்கில் பிடுங்கி எறிந்துவிட்டது. இதைதட்டிக்கேட்ட 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கி மீண்டும் வழங்க மறுத்து வருகின்றனர். வேலை மறுக்கப்பட்ட 12 தொழிலாளர்களுக்கும் பூங்கா நிர்வாகம் மீண்டும் வேலை வழங்கவேண்டும்.
இந்த பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர். கேளம்பாக்கம் போலீசார் முன்னிலையில் பூங்கா நிர்வாக உயரதிகாரிகள் தொழிலாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பூங்கா நுழைவாயில் முன்பு பதட்டம் நிலவுவதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
The post அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்ககோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த முயற்சி: போலீசார் பந்தலை பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.