சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் தனியார் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் தவறுதலாக வேறு நபர்களின் பெயர்களுக்கு பட்டா வழங்கி விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக டிஆர்ஓ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள குடிமங்கலத்தில் தர்ம தண்ணீர் பந்தல் அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை 1917-ல் சுப்பா நாயக்கர் என்பவர் தானமாக வழங்கினார்.கோடிக்கணக்கான மதிப்புள்ள இந்த நிலத்தை வேறு நபர்களின் பெயர்களுக்கு அதிகாரிகள் முறைகேடாக பட்டா வழங்கியுள்ளதாகவும், அந்த நிலத்தை தற்போது சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறி சுப்பா நாயக்கரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களில் ஒருவரான கே.சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.