சென்னை,
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 23-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அரையாண்டு விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன.
இந்த இடைப்பட்ட நாட்களில் சில தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதற்கு பள்ளிக்கல்வித் துறை கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுபோன்று அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. அதுதொடர்பான உத்தரவை முறையாக பின்பற்ற அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கல்வித் துறை அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுபோன்ற விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்து, அதற்கான சுற்றறிக்கை விடுவதும், அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்துவதும் தொடர் கதையாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.