அருள் தந்த அனந்தமங்கலம் அனுமன்

1 week ago 4

ஐம்பது வருடங்களுக்கு முன்னால் தரங்கம்பாடிக்கு அருகிலுள்ள பொறையார் தவசுமுத்து நாடார் உயர்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவர் தலைவனாகவும், என்.சி.சி-சார்ஜெண்டாகவும் இருந்தேன். அப்போது நான் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். இளைஞர் ஒருவர் புதிய தலைமை ஆசிரியராக வந்திருந்தார். நிறை வகுப்பு அறைகள் கொண்ட புதிய கட்டடம் ஒன்றைக் கட்ட உறுதி பூண்டார் அவர்.சுமார் ஒன்றரை வருட காலத்துக்குள், அப்படியொரு கட்டடம் தயாரானது, திறப்பு விழாவுக்கு நல்ல நாள் குறிக்கப்பட்டது. அப்போதைய பள்ளித் தாளாளர் கனகசபை நாடார் தலைமையில், அப்போதைய தமிழகக் கல்வி அமைச்சர் கக்கன் அவர்களைக் கொண்டு திறப்பு விழா நடத்தத் தீர்மானித்தனர். அமைச்சரும் ஒப்புக் கொண்டார்.

விழாவுக்கு முதல் நாள் தலைமை ஆசிரியர் என்னை அழைத்தார்: ‘‘கல்வி அமைச்சர் வந்து திறந்து வைக்கிறது ரொம்ப பெரிய சமாசாரம். ஸ்கூல் லீடரான நீதான் எல்லாத்துக்கும் பொறுப்பு எடுத்துண்டாகணும். திறப்பு விழாவுல ரிப்பனை அமைச்சர் கட்பண்றதுக்காக வெள்ளிக் கத்திரிக்கோல் ஒண்ணு வாங்கியிருக்கேன். என்ன விலை தெரியுமோ? நூத்தைம்பது ரூபாய்! அதை பட்டுத் துணி போட்ட ஒரு வெள்ளித்தட்டுல வச்சு ஒங்கைல கொடுக்கப் போறேன். அமைச்சர் ரிப்பன்கிட்ட வரச்சே….. நீ அவர் பக்கத்லயே நின்னு பவ்யமா கத்திரிக்கோல் தட்டை
நீட்டணும்!’’‘‘சரிங்க சார்…!’’ என்றேன்.

அவர் தொடர்ந்தார்: ‘‘ரிப்பன் கட்’’ பண்ணப்றம் வெள்ளிக் கத்தரிக்கோல திரும்பவும் எங்கிட்ட ஒப்படைக்க வேண்டியது ஒன் பொறுப்பு.’’ தலையை ஆட்டி ஒப்புக் கொண்டு வௌியே வந்தேன். என்னை பயம் கவ்விக் கொண்டது. ‘நம்மிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டாரே ஹெட்மாஸ்டர். ஒருவேளை அமைச்சரிடமிருந்து கத்திரிக்கோலைத் திரும்பப் பெற முடியாமல் போனால்… ஹெட்மாஸ்டர் தப்பாக நினைப்பாரே…’ என்று குழம்பி நின்றேன். ‘பளிச்சென்று என் நினைவுக்கு வந்தார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல…. பொறையாரிலிருந்து நான்கு அல்லது ஐந்து கி.மீ.தொலைவில் அனந்தமங்கலத்தில் கோயில் கொண்டிருக்கும் ‘தசபுஜ த்ரிநேத்ர’ (பத்து கரங்கள், மூன்று கண்கள் உடைய) ஆஞ்சநேய ஸ்வாமிதான். அவர் மிகுந்த வரப்பிரசாதி. ஞாயிறுதோறும் அனுமனை தரிசிக்க சைக்கிளில் அனந்தமங்கலம் சென்றுவிடுவேன்.

வயதான பட்டர் ஒருவர் அங்கு பூஜை செய்வார். ஒரு நாள் அவர் என்னிடம், ‘‘தம்பி, நீ பக்தி உள்ள பையனா தெரியறே… ஒங்கிட்ட ஒரு ரகசியம் சொல்றேன் கேளு… சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு நாள்… வடக்கே இருந்து ஒரு சந்நியாசி இங்க தரிசனம் பண்ண வந்தார். அவர் என்னைத் தனியா கூப்டு, ‘இந்த த்ரி நேத்ர தசபுஜ அனுமான் ரொம்பவும் சாந்நித்யமாக இருக்கார். இவரை இருபத்தோரு தடவை வலம் வந்து, ஐந்து நமஸ்காரப் பண்ணி பிரார்த்தித்தால் நினைக்கிற காரியம் கைகூடும்’னு சொன்னார். அது வாஸ்தவங்கிறதை கண்கூடா பார்க்கிறேன்.அதனால் ஒனக்கு ஏதாவது காரியம் கை கூடணும்னா இவரை இருபத்தோரு பிரதட்சிணம் பண்ணி, அஞ்சு தடவ நமஸ்காரம் செய். நல்லதே நடக்கும்!’’ என்று கூறி ஆசீர்வதித்தார். அதன் பிறகு அங்கு எப்போது போனாலும் 21 பிரதட்சிணமும், ஐந்து நமஸ்காரமும்தான்.

அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை உளமார வேண்டினேன். ‘ஆஞ்சநேயா! நாளக்கி ரிப்பனை அமைச்சர் ‘கட்’ பண்ணின உடனே அந்த வெள்ளிக் கத்திரிக்கோலை எங்கிட்ட திருப்பிக் கொடுக்கும்
படியா நீதான் அருள் பண்ணணும். வர்ற ஞாயிற்றுக்கிழமை ஒன் சந்நதிக்கு வந்து இருபத்தோரு பிரதட்சிணம், ஐந்து நமஸ்காரம் பண்றேன்…’ என்று வேண்டிக்கொண்டேன்.

மறுநாள் மாலை 5 மணி. பள்ளிக்கூட வளாகத்தில் எங்கு பார்த்தாலும் மாவிலைகள், தோரணங்கள், வாழை மரங்கள்! புதிய கட்டட நுழைவாயிலில் குறுக்காகப் பச்சை கலர் ரிப்பன் கட்டப்பட்டிருந்தது. எல்லோர் முகத்திலும் சந்தோஷம்! மாலை 5.30 மணிக்குத் தலைமை ஆசிரியர் என்னை அழைத்தார். சென்றேன். என் கையில் ஒரு வௌ்ளித் தட்டைக் கொடுத்தார். அதில், சில சிவப்பு ரோஜாக்களுடன் வெள்ளிக் கத்திரிக்கோல் மினுமினுத்தது! மானசீகமாக அனந்தமங்கலம் அனுமனை வேண்டிக் கொண்டேன்.

சரியாக 6.00 மணிக்கு கக்கன் அவர்கள் வந்துவிட்டார். புதிய கட்டடத்தருகே வெள்ளித் தட்டுடன் தயாராக நின்றிருந்தேன். கெட்டி மேளம் முழங்கியது. தலைமையாசிரியர் என்னிடம் ஜாடை காட்டினார். தட்டை அமைச்சரிடம் பணிவாக நீட்டினேன். அவர், புன்முறுவலுடன் வெள்ளிக் கத்திரிக்கோலை எடுத்து ரிப்பனை வெட்டினார். ஒரே கரகோஷம்! நான் கத்திரியைத் திரும்பப் பெற, தட்டை அவசரமாக அவர் முன் நீட்டினேன். ஆனால் அவர் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, கத்திரிக்கோலைத் தன் விரலால் சுழற்றிக் கொண்டே நடக்க ஆரம்பித்தார் திரும்பிப் பார்த்தேன்.

தலைமை ஆசிரியர்! என்னைச் சுட்டெரிப்பது போல் பார்த்தார். மீண்டும் அமைச்சரை அணுகினேன். சிரித்தபடி மெதுவாக அவர் முன் தட்டை நீட்டினேன். அவரோ, அதிலிருந்து ரோஜாக்களில் ஒன்றை இடக் கையால் எடுத்துக் கொண்டு, என் முதுகில் ஒரு ‘ஷொட்’டு கொடுத்துவிட்டு நடையை துரிதப்படுத்தினார். ‘அனந்தமங்கலம் ஆஞ்சநேயா… ஒன்ன நம்பின பக்தனை கைவிட்டுட்டியே! நியாயமா?’ என்று மனசுக்குள் அழுதேன். விழா மேடை. அமைச்சருக்கு முன்னால் மேஜையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிக் கத்திரிக்கோல். ‘எப்படியும் அதைத் திரும்பப் பெற்றே தீருவது’ என்று வைராக்கியத்தில் அமைச்சரது நாற்காலிக்குப் பின்னால் போய் நின்று கொண்டேன்.

அமைச்சர் பேச எழுந்தார். தனது மேல் வஸ்திரத்தை எடுத்து அந்தக் கத்திரிக்கோல் மேலே போட்டுவிட்டு ‘மைக்’ முன் நின்றார். அவர், யதார்த்தமாகத்தான் இதைச் செய்தார். எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. தேசிய கீதத்துடன் விழா முடிந்தது. கக்கன் அவர்கள் விடைபெற்று காரில் ஏறி அமர்ந்தார். அவரின் வலக் கரத்தில் வெள்ளிக் கத்திரிக்கோல்! அவரை வழியனுப்ப கூட்டம் முண்டியடித்தது. நான் சற்றுப் பின்னால் நின்றிருந்தேன். என் வாய் விடாமல், ‘அனந்தமங்கலம் ஆஞ்ஜநேயாய நமஹ!’ என ஜபித்துக் கொண்டிருந்தது. திடீரென கார்
கதவைத் திறந்து கொண்டு இறங்கினார் அமைச்சர். சற்றுத் தள்ளி நின்றிருந்த என்னைப் பார்த்து, சிரித்தபடி சைகை காட்டி அருகே வருமாறு அழைத்தார். சென்றேன். முதுகில் தட்டிக் கொடுத்து, வெள்ளிக் கத்திரிக்கோலை என்னிடம் ஒப்படைத்தபடி சொன்னார்.

‘‘தம்பி! இந்தக் கத்திரிக்கோல எங்கிட்டேருந்து திரும்ப வாங்கறத்துக்கு நீ தவிச்ச தவிப்பு எனக்குப் புரியுது! யாரோ எங்கிட்டேருந்து ‘இத’ திரும்ப வாங்கியே ஆகணும்னு கண்டிஷன் போட்டுருக்காங்கங்கிறதயும் புரிஞ்சுக்கிட்டேன். கடைசி வரைக்கும் நீ என்ன பண்றேனு சும்மா ‘டெஸ்ட்’ பண்ணிப் பாத்தேன்… நல்லாப் படி தம்பி!’’ என்று சொல்லி, புறப்பட்டார் அமைச்சர். என் கண்களில் ஆனந்தக் கண்ணீர்! அனந்தமங்கலம் இருக்கும் திக்கை நோக்கிக் கைகளை மேலே உயர்த்திப் பெரிய கும்பிடு போட்டேன்!

ரமணி அண்ணா

The post அருள் தந்த அனந்தமங்கலம் அனுமன் appeared first on Dinakaran.

Read Entire Article