அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நின்றிருந்த காஸ் டேங்கர் லாரி மீது பனை ஓலை ஏற்றி வந்த மற்றொரு லாரி மோதியது. இதில், காஸ் டேங்கர் லாரியின் வால்வு உடைந்து தொடர்ந்து காஸ் வெளியேறியதால் பரபரப்பு நிலவியது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர். தஞ்சாவூரில் இருந்து தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு நேற்றிரவு காஸ் டேங்கர் லாரி புறப்பட்டு வந்தது. நாமக்கல்லை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வந்த அவர், கஞ்சநாயக்கன்பட்டி பிரிவில் காஸ் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்தார். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் செல்வம் (45). இவர், கொல்கத்தாவில் இருந்து அலங்கார பனை ஓலையை லாரியில் ஏற்றி கொண்டு தூத்துக்குடி சென்றார். இந்த லாரி, இன்று அதிகாலை 4 மணியளவில் கஞ்சநாயக்கன்பட்டி பிரிவில் சாலையோரம் நின்றிருந்த காஸ் டேங்கர் லாரி மீது மோதியது.
இதில் காஸ் டேங்கர் லாரியின் வால்வு உடைந்து காஸ் வெளியேறியது. இது குறித்து அருப்புக்கோட்டை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சந்திரகுமார், உதவி அலுவலர் தாமோதரன், நிலைய அலுவலர் ராமராஜ், சிறப்பு நிலைய அலுவலர் ஷேக் உதுமானா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெளியேறிய காஸ் மீது தொடர்ந்து நீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இருப்பினும் காஸ் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் இருந்தது. இதில், ரூ.5 லட்சம் மதிப்பிலான காஸ் வெளியேறியதாக கூறப்படுகிறது. மருத்துவனையில் உபயோகிக்கும் காஸ் என்பதால் யாருக்கும் பாதிப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அருப்புக்கோட்டையில் காஸ் டேங்கர் மீது லாரி மோதி விபத்து: தொடர்ந்து காஸ் வெளியேறியதால் பரபரப்பு appeared first on Dinakaran.