அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு சரத்குமார் வரவேற்பு

2 hours ago 2

சென்னை,

பா.ஜனதாவைச் சேர்ந்த நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2009-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என சரியான தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்த திருமாவளவனின் வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்பு சரியானது தான் என உறுதிபட கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

மாநில உரிமைகள் குறித்து ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கும் கட்சியினர், மாநில உரிமைகளை நீதிமன்றமே நிலைநாட்டி தீர்ப்பு வழங்கிய சமயத்தில், இந்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது வியப்பூட்டுகிறது.

உள் இட ஒதுக்கீடு, பட்டியல் சமூகத்தை பல குழுக்களாகப் பிரிக்கும் எனத் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். பட்டியலின மக்களிடையே இருக்கும் சில பிரிவினைகளை களைந்து அவர்களை ஒன்றுபட செய்திருக்க வேண்டியது, தலைவர்களின் கடமை.

உண்மையாகவே தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடும் தலைவராக இருந்தால், இந்த தீர்ப்பை ஆதரித்து, சமூக நீதியை நிலைநாட்டவும், சமத்துவம் தழைக்கவும் திருமாவளவன் பணி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Read Entire Article