மதுரை: “தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ள அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை நீக்காவிட்டால், 2026 தேர்தலில் திமுக கண்டிப்பாக எதிர்வினையை சந்திக்கும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதிய தமிழகம் கட்சி சார்பில் நவ.7-ல் 6 அம்ச கோரிக்கை குறித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும். தமிழகம் சமூக நீதியின் தாயகம் என்று சொல்கிறார்கள். இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு நீதிக்கட்சி காலத்திலிருந்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டில் பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் திமுக ஆட்சியில் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது.