சண்டிகர்: அரியானாவில் 90 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அக்டோபர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அங்கு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பான், எதிர்க்கட்சி தலைவர் பூபேந்திர சிங் ஹூடா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரியானா தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி, 18 முதல் 60 வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.2000 நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை அளித்திருந்தது. அத்துடன் பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
அவற்றில், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும், ரூ.500க்கு காஸ் சிலிண்டர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.6,000 பென்ஷன், 300 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை, விவசாயிகள் நலனுக்காக தனியாக விவசாயிகள் நல ஆணையம் அமைத்தல், வீரமரணமடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு நிதி, வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட வாக்குறுதிகள் குறிப்பிடத்தக்கது.
The post அரியானாவில் ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை மகளிருக்கு மாதம் ₹2000 நிதியுதவி: காங். தேர்தல் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.