அரியானாவில் காங்.பின்னடைவு: காரணம் என்ன?

3 months ago 23

சண்டிகர்,

பா.ஜனதா ஆளும் அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா, அங்கே ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கியது. அதேநேரம் 10 ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்திருந்த காங்கிரசோ, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வேகத்தில் களப்பணி ஆற்றியது. இந்த இரு கட்சிகளை தவிர ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜே.ஜே.பி-ஆசாத் சமாஜ் கூட்டணி என பலமுனை போட்டி காணப்பட்டது. எனினும் பெரும்பாலான இடங்களில் பா.ஜனதா-காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி இருந்தது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 90 தொகுதிகளில் பாஜக 49 தொகுதிகளிலும் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், முன்னிலையில் உள்ளன. இந்தநிலையில், அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு வெளியான நிலையில் பின்னடைவை சந்தித்துள்ளது. கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

அரியானாவில் காங்கிரசின் பின்னடைவுக்கு கோஷ்டி பூசல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங், குமாரி செல்ஜா இடையேயான பூசலே காங்கிரசின் பின்னடைவுக்கு காரணம் என கூறப்படுகிறது. காங்கிரசில் நிலவிய கோஷ்டி பூசல் பாஜகவுக்கு சாதகமாக அமைந்ததாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் ஜாட் சமூக வாக்குகள் பிற கட்சிகள், சுயேச்சைகளுக்கு பிரிந்ததாக கூறப்படுகிறது இதுவும் காங்கிரசின் பின்னடைவுக்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன் முதல்-மந்திரியை மாற்றியது பாஜகவுக்கு சாதகமாக அமைந்ததாக பார்க்கப்படுகிறது. மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகத், புஜ்ரங் புனியா ஆகியோரை காங்கிரசில் இணைத்தது சட்டசபை தேர்தலில் பலன் தரவில்லை. அரியானா வரலாற்றில் ஒருகட்சி தொடர்ந்து 3 முறை ஆட்சி அமைத்ததே இல்லை. அரியானாவில் பாஜக தொடர்ச்சியாக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Read Entire Article