அரியானா தேர்தல்: 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

3 months ago 26

சண்டிகார்,

அரியானாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இந்த தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த 18-ந்தேதி வெளியிட்டார்.

இதில் 18 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம், ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர், முதியோர், மாற்றுத்திறனாளி, விதவைகளுக்கு ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம், 300 யூனிட் இலவச மின்சாரம், ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு, கிரீமிலேயர் உச்சவரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிப்பு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் போன்ற வாக்குறுதிகளும் இடம் பெற்றிருந்தன.

காங்கிரசின் இந்த தேர்தல் அறிக்கையை அரியானாவில் கட்சித்தலைவர்கள் நேற்று வெளியிட்டனர். இந்த விரிவான அறிக்கையில் மேலும் பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்று இருந்தன. அதன்படி, 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். விவசாயிகளின் மேம்பாட்டுக்காக கமிஷன் அமைக்கப்படுவதுடன், சிறு விவசாயிகளுக்கு டீசல் மானியம் வழங்கப்படும். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி, வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்காக நினைவிடம், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

இதர பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக்காக சிறப்பு கமிஷன், சிறுபான்மையினர் கமிஷன் மாற்றியமைப்பு, சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டிக்கு தேர்தல், ஒன்றியந்தோறும் திறன் மையங்கள், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு நிதி மற்றும் நிர்வாக அதிகாரம் வழங்கப்படும். இதைப்போல கும்பல் கொலை, வெறுப்பு கொலை, ஆணவக்கொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் உள்பட மேலும் பல்வேறு வாக்குறுதிகள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருந்தன.

Read Entire Article