அரியலூர், ஜன. 26: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் வரைந்த விழிப்புணர்வு கோலங்களையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற்ற வாக்காளர் தின விழாவில் வாக்காளர் உறுதிமொழியான “மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்.” உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர், தேசிய வாக்களார் தினம் மற்றும் வாக்களார் விழிப்புணர்வு தொடர்பாக கல்லூரி மற்றும் பள்ளிகளில் நடைபெற்ற சுவரோவியப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கும், இதேபோன்று ரங்கோலிப்போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2025-இல் சிறப்பாக பணிபுரிந்த கணினி நிரலாளர்கள் மற்றும் உதவி கணினி நிரலாளர்களுக்கும், சிறப்பு சுருக்கத்திருத்தம் 2025-இல் சிறப்பு முகாம்களில் படிவங்கள் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்களார்கள் மற்றும் இளம் வாக்காளர்களுக்கும் பொன்னாடை போற்றி மரியாதை செய்தார்.
அதனைத்தொடர்ந்து பள்ளி, மாணவ, மாணவியர்களின் வாக்காளர் தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளான உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, தேர்தல் வட்டாட்சியர் வேல்முருகன் மற்றும் இதர அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post அரியலூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.