அரியலூர், ஜன.31: அரியலூரில் பிப்.6ம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை நகலை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து ஒன்றிய தொழிற் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூரிலுள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து ஒன்றிய தொழிற் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பணி நிரந்தரம், நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், போனஸ் , பணிக்கொடை ,வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகளை பறித்ததாக ஒன்றிய அரசைக் கண்டித்து, பிப்.6 ம் தேதி அரியலூரில் ஒன்றிய நிதிநிலை அறிக்கை நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது,
தொழிலாளர்களுக்கு பாதகமான நான்கு சட்டங்களை எதிர்த்து, நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை தொடங்குவது,இதற்கு உழைக்கும் மக்களை தயார்படுத்தும் வகையில் பிப்.12 இல் ஜெயங்கொண்டத்திலும், பிப்.15 இல் திருமானூரிலும், பிப்.16 இல் அரியலூரிலும் பரப்புரை பிரச்சார கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தொமுச மாவட்ட கவுன்சில் செயலர் மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலர் துரைசாமி, நிர்வாகி சிற்றம்பலம், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post அரியலூரில் அனைத்து ஒன்றிய தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டம் appeared first on Dinakaran.