திருமயம்,ஜன.22: அரிமளம் அருகே உள்ள தாஞ்சூர் கிராமத்தில் கூட்டுறவு பால் கொள்முதல் நிலைய கட்டிடத்தினை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து பேசினார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற அரசு மக்கள் நலத்திட்ட பணிகளை அமைச்சர் ரகுபதி மக்கள் பயன்படுத்தும் வகையில் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிராமப்பகுதிகளில் வாழும் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடும் வகையில் எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், கிராமப்புறங்களுக்குத் தேவையான சாலை வசதி, மின் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இன்றையதினம், அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள கே.புதுப்பட்டி, நயாரா பெட்ரோல் பங்க் அருகில், சமுத்திரம் ஊராட்சி, தாஞ்சூர் காமண்டி திடல், கீழப்பனையூர் ஊராட்சி, காமாட்சிபுரம் இந்திரா செல்வம் மண்டபம் பின்புறம், ஓணாங்குடி சிவகமலம் வீடு அருகில் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளையும், கைக்குலான்வயல் ஊராட்சி, கே.புதுப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டிடத்தினையும், சமுத்திரம் ஊராட்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள தாஞ்சூர் கூட்டுறவு பால் கொள்முதல் நிலைய கட்டிடத்தினையும், ஓணாங்குடி ஊராட்சி, சத்திரம் மற்றும் மிரட்டுநிலை ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடங்களையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், இளையராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post அரிமளம் அருகே தாஞ்சூர் கிராமத்தில் கூட்டுறவு பால் கொள்முதல் நிலைய கட்டிடம் appeared first on Dinakaran.