மதுரை: “கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத மத்திய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது. அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இது தமிழகத்தின் வளங்கள், வரலாற்றை ஒருசேர அழிக்கும் முயற்சி.” என மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் அழகர்மலைக்கு அருகே 2015.51 எக்டரில் (சுமார் 5 ஆயிரம் ஏக்கர்) டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிறது வேதாந்தா நிறுவனம். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4-வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.