அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலம் ரத்து.. தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு..!!

4 hours ago 1

மதுரை: மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் டங்ஸ்டன் கனிமம் எடுக்க ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. இதை ரத்து செய்து, டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரி மேலூர் சுற்றுவட்டார பகுதியினர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசும் சட்டசபையில் கடந்த 9ம் தேதி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. இதையடுத்து ஒன்றிய அரசு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனிடையே, பாஜக பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தலைமையில் அரிட்டாபட்டி பகுதி கிராமத்தினர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர். இவர்கள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்து பேசினர்.

பின்னர் டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும், ஒன்றிய அமைச்சர், பிரதமருடன் பேசிய பிறகு, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது. எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டுக்கு டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு ஒன்றிய அரசு பணிந்தது. மேலும், வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஏல உரிமை ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

The post அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலம் ரத்து.. தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.

Read Entire Article